சென்னையில் ஜனாதிபதி தலைமையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா

No comments
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 21, 22 ,23, 24 ஆகிய தேதிகளில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை வகிக்க இருக்கிறார். இது குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் கல்யாண் பேசுகையில், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை வருகிற செப்டம்பர் மாதம் நான்கு நாட்கள் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக கொண்டாட இருக்கிறது. இந்த விழாவில் தென்னிந்தியாவின் அனைத்து நடிகர், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். விழாவின் முதல் நாளான 21-ஆம் தேதி மலையாள நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் 4 மணி நேரம் நடக்கும்.

அன்று மாலை தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 22-ஆம் தேதி காலை கன்னட திரைத்துறையினரின் கலை நிகழ்ச்சிகளும், மாலையில் தெலுங்கு திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். 23-ஆம் தேதி மாலை தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சி நடக்கும். 24-ஆம் தேதி ஜனாதிபதியுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக ஆளுனர் ரோசய்யா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் திரைப்பட துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

இந்த விழாவில் கலந்துகொள்ளவும், கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகைக்காகவும் நான்கு மொழி படப்பிடிப்புகளும் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறாது. இது மட்டுமின்றி சென்னை நகரம் முழுக்க வண்ணமயமான அலங்காரங்கள், தியேட்டர்களில் சிறந்த இந்திய திரைப்படங்களை பார்க்கும் வசதி, சென்னையின் முக்கிய இடங்களில் சினிமா கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்கங்கள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்த விழா களைகட்டும்’’ என்றார். இந்த பேட்டியின்போது ஃபிலிம் சேம்பர் செயலாளர் ரவி கொட்டாரக்கரா, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொது செயலாளர் ராதா ரவி, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ‘கலைப்புலி’ எஸ்.தாணு, ‘பெப்சி’ தலைவர் அமீர், செயலாளர் சிவா, ஆனந்தா எல்.சுரேஷ், நடிகர் சிவகுமார், எடிட்டர் மோகன் மற்றும் பலர் அருகில் இருந்தனர்.

No comments :

Post a Comment