தலைவா (திரைவிமர்சனம்)

No comments
மும்பை தமிழர்களின் காட்பாதராக இருக்கிறார் ‘அண்ணா’ சத்யராஜ். மனைவியை வன்முறைக்கு பலிகொடுத்து விடுவதால் மகனை ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கிறார். அங்கு (மினரல்) பாட்டிலும், ஆட்டமுமாக இருக்கும் விஜய்க்கு அமலா பாலுடன் காதல். அமலாவின் தந்தை சுரேஷ், ‘உங்க அப்பாவை பார்க்கணுமே’ என்று சொல்ல, மும்பை வருகிறார் விஜய். பிறகுதான் தெரிகிறது, அமலாவும், சுரேசும் அப்பாவை பிடிக்க வந்த போலீஸ் அதிகாரிகள் என்று.

கைது செய்யப்பட்ட மறுநிமிடமே அப்பா கொல்லப்பட, அவரை நம்பி இருக்கும் மக்களை காக்கும் பொறுப்பு விஜய்க்கு வருகிறது. தலைவா ஆகும் விஜய், எதிரிகளை வதம் செய்வதும், கூட இருப்பவர்களே துரோகம் செய்வதும் மீதி கதை. இதற்கிடையே அமலா தொடர்ந்து விஜய்யை காதலிப்பதும், ராகிணியின் திடீர் காதலும் ரொமான்ஸ் ஏரியாவை எடுத்துக் கொள்ள, பிறகு திகட்ட திகட்ட ஆக்ஷனால் அடித்து அனுப்புகிறார்கள்.

அதே இளமை துள்ளலோடு இருக்கிறார் விஜய். நடன காட்சிகளில் இன்னும் பின்னுகிறார். காதல் விளையாட்டில் கலகலவென்று செல்லும் அவர், தலைவன் பொறுப்பு ஏற்றதும் இன்னொரு முகம் காட்டுவது விறுவிறுப்பு. அவரது சுறுசுறுப்பு, அமலா பாலின் கிளுகிளுப்பு, சந்தானத்தின் சதாய்ப்பு என விர்ரென்று கழிகிறது ஆஸ்திரேலியா டூர். மும்பை வந்து இறங்கியதும் படம் டேக் ஆஃப் ஆகிறது.

அமலா பால் உருட்டி மிரட்டி விழித்து விஜய்யை காதலிக்கும்போது அழகு. திடீரென்று போலீஸ் அவதாரம் எடுத்து கிளைமாக்சில் விஜய்க்கே வாழ்க்கை கொடுக்கிற அளவுக்கு வந்து நிற்பதும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் மனைவியாகி காப்பி கொடுப்பதெல்லாம், போங்க பாஸ். அதிலும் அமலா, போலீஸ் டிரஸ்சில் வரும் காட்சிகள், மாறுவேட போட்டிக்கு வரும் குழந்தை போலவே இருக்கிறது.

கொஞ்ச நேரம் வந்தாலும் கொத்திக்கொள்ளும் அழகு ராகிணிக்கு. விஜய்யை அவர் காப்பாற்றும் ஐடியா, மொக்கை வில்லன்கள் அதைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போவதெல்லாம் சந்தானம் இல்லாத காமெடி காட்சிகள். சத்யராஜ் சீரியசான அண்ணாவாக வாழ்ந்திருக்கிறார். ‘இது ஒருவழி பாதை. உள்ள வரத்தான் முடியும்’ என்று தன் தத்துவங்களை மகனுக்குச் சொல்லிவிட்டுப் போகிறார்.


சந்தானம் வழக்கம்போல ஹீரோவின் நண்பன். மும்பை திரும்பிய பிறகு படத்தையும், விஜய்யையும் வாரு வாரு என்று வாருகிறார். கடைசியில் அவரே சீரியசாக நடிக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் கதையின் ட்விஸ்ட்டுக்கு உதவியிருக்கிறார் உதயா. மனைவி மீது பாசம், அவரின் இழப்பு, உண்மையை உலகுக்கு சொல்ல நடத்தும் போராட்டம் என மின்னி மறைகிறார் உதயா.


ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் நா. முத்துகுமாரின் பாடல்கள் அருமை. ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா‘ ஒன்ஸ் மோர் பாடல். படத்தின் இரண்டாவது ஹீரோ ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. ஆஸ்திரேலிய அழகையும் மும்பையின் அழுக்கையும் அப்படியே அள்ளி வந்திருக்கிறது அவரது கேமரா. ஆக்ஷன் படத்தில் லாஜிக் பார்க்க வேண்டியதில்லைதான். அதற்காக சித்தப்பா, ஒரு முழ கத்தியை முதுகில் சொருகிய பின்பும் விஜய், காயத்தை கட்டிக்கொண்டு அடித்து சாய்ப்பதெல்லாம் ஓவர்.

எல்லா காட்சிகளிலும் ஏதாவது ஒரு படத்தின் சாயல் தெரியும் அளவுக்கு கற்பனை வறட்சி. ‘நாயகன்’, ‘பாட்ஷா’, ‘தேவர் மகன்’ படங்களை பார்க்காதவர்கள், 3 படத்தையும் பார்க்க வசதியாக வந்திருக்கிறது ‘தலைவா’. மணிரத்னம், ராம்கோபால் வர்மா ஆகியோருக்கு நன்றி கார்டு போட்டு தன் நேர்மையை காட்டியிருக்கும் இயக்குனர் விஜய்க்கு பாராட்டுக்கள்.


No comments :

Post a Comment