ஜமீன் அன்பை வெல்லும் ஹீரோ
கோடீஸ்வர ஜமீன்தாருக்கு ஒரே பேரன் நானி. பணத்தில் புரளும் நானி, யார் பேச்சையும் கேட்காமல் இஷ்டம்போல் பணத்தை தண்ணீராகச் செலவு செய்து வாழ்கிறார். மற்றவர்கள் கஷ்டம் தெரியாமல் திமிர்த்தனமாக வளரும் நானியை நினைத்து வருந்துகிறார் ஜமீன் தாத்தா. பேரனை திருத்த என்ன செய்யலாம் என கண்டிஷன் போடுகிறார். ஏழை மாணவர்கள் படிக்கும் இடத்தில் எளிமையாகப் படித்து நானி, டிகிரி முடித்தால்தான் சொத்து உண்டு என்கிறது அவரது உயில். பிறகென்ன பணக்கார வாழ்க்கையை விட்டுவிட்டு, சாதாரண மனிதனாக வாழ்வை எப்படி கற்றுக்கொண்டு தனது லட்சியத்தை வெல்கிறார் என்பது ஜாலி மற்றும் சென்டிமென்ட் கலந்த கதை.பொறுப்பில்லாமல் அலையும் கேரக்டரிலும் பிறகு பொறுப்புள்ள பிள்ளையாவதிலும் நானி கச்சிதம். தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். காசு பணத்தில் புரண்டுவிட்டு பிறகு சிக்கன வாழ்வை வாழும்போது தவிக்கிற தவிப்பில் அப்படியொரு நடிப்பு. தாத்தாவின் கண்டிஷன்களை நிறைவேற்றுவதிலும் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டியிலும் நானி, தன்னை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார்.
ஹீரோவின் வழக்கமான காதலி ஹரிப்பிரியா. நடிக்க பெரிய வாய்ப்பில்லை என்றாலும் அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. பாடல் காட்சிகளில் கிளாமராக ஆடுகிறார். பிந்துமாதவியும் இருக்கிறார். மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு வருகிறார். நண்பனாக வரும் தன்ராஜ், ரமேஷ், வில்லனாக வரும் ரனதிர் மற்றும் ஸ்ரீனி அவசரலா, எம்.எஸ்.நாராயணா உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
‘எ மில்லினர்ஸ் பர்ஸ்ட் லவ்’ என்ற கொரிய படத்தை டுமீல் பண்ணி தெலுங்கு நேட்டிவிட்டியோடு எடுத்திருக்கிறார்கள். அதனால் மசாலா அதிக தூக்கலாக இருக்கிறது. செல்வகணேஷின் இசையில் இரண்டு பாடல்கள் மனதில் நிற்கின்றன. சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு பளிச். முதல் பாதியில் ஜாலியை தந்தவர்கள், இரண்டாம் பாதியை சென்டிமென்டுக்குள் விட்டுவிட்டார்கள். அதிகப்படியான நாடகத்தன்மை நிறைய கேள்விகேட்க வைத்தாலும் படத்தை ரசிக்க முடிகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment