மீண்டும் அன்னா ஹசாரே

No comments
அன்னா ஹசாரேவை மறந்திருக்க மாட்டோம். சென்ற ஆண்டு இந்தியா முழுக்க ஊழலுக்கு எதிரான மக்களின் கிளர்ச்சி அவர் தலைமையில் கொழுந்துவிட்டு எரிந்தது. விஷயம் இதுவல்ல. அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உழைக்கும் மக்களல்ல. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இதுதான் மனதில் கொள்ள வேண்டிய விஷயம். காரணம், இதற்கு முன்பு இந்திய நடுத்தர வர்க்கம் இந்தளவுக்கு கிளர்ந்து எழுந்ததில்லை. கூழுக்கும், மீசைக்கும் ஆசைப்பட்டு படகில் பயணிப்பதுதான் இந்த மக்களின் இயல்பு. கோழைத்தனமே இவர்களது குணம்.

போராட்டம் என்றால் காத தூரம் ஓடுவார்கள். அதே அந்தப் போராட்டம் வெற்றிப் பெற்றால் ஓடோடி வந்து உரிமைக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வரலாற்றில் முதல் முறையாக ஒன்று திரண்டு குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பது வெறும் சம்பவமல்ல. பல உண்மைகளை உணர்த்தும் பாடம். அதில் முதன்மையானது உலகமயமாக்கலுக்கு பிறகு இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது. இரண்டாவது அநீதிகளை கண்டு உள்ளம் குமுறுகிறார்கள்.

ஆனால், சாத்வீகமான போராட்டங்கள் வழியாகவே அதற்கு தீர்வு காண நினைக்கிறார்கள் என்பது. இந்த இரண்டு இயல்புகளையும் பிரதிபலிக்கும் படம்தான் ‘சத்யாகிரஹா’. இந்தியில் உருவாகி, இந்தியாவெங்கும் ரிலீசாகும் இந்தப் படத்தில் அன்னா ஹசாரேவின் சாயலில் அமிதாப்பச்சனின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச செய்தியாளராக கரீனா கபூர். நடுத்தர வர்க்க இளைஞர்களின் பிரதிபலிப்புகளாக அஜய்தேவ்கன், அர்ஜுன் ராம்பால். ‘கெட்ட’ அரசியல்வாதியாக மனோஜ் பாஜ்பாய். கமர்ஷியல் கலந்த அரசியல் படங்களை எடுப்பதில் வல்லவரான பிரகாஷ் ஜா இந்தப் படத்தை எழுதி, இயக்கி தயாரித்திருக்கிறார்.


பீகாரில் பிறந்து வளர்ந்த இவர், புனே திரைப்படக் கல்லூரியில் எடிட்டிங் கோர்ஸில் சேர்ந்தார். ஆனால், முடிக்கவில்லை. பாதியிலேயே வெளியேறிவிட்டார். 1960களின் இறுதியில் நிலவிய மாணவர் எழுச்சி, நக்சல்பாரி போராட்டம், எமர்ஜென்சி ஆகிய வரலாற்று நிகழ்ச்சிகள் இவரது ஆளுமையை உருவாக்கியிருக்கின்றன. இந்த சிஸ்டத்துக்குள் இருந்தபடியே அதை மாற்ற முடியும் என்று நம்புபவர்.

அதை இவரது அனைத்துப் படங்களிலும் பார்க்கலாம். உணரலாம். தரிசிக்கலாம். ‘டாமுல்’, ‘பரிநதி’, ‘மிருத்யுதந்த்’, ‘கங்காஜல்’, ‘அபாஹரன்’, ‘ராஜ்நீத்தி’, ‘சக்கரவியூக்’ உட்பட இவரது இயக்கத்தில் உருவான அனைத்துப் படங்களும் முக்கியமானவை. சமகால அரசியலை அலசி ஆராய்பவை. அதே நேரம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றவை. ‘சத்யாகிரஹா’ அந்தப் பட்டியலில் இணையும் என்று உறுதியாக நம்பலாம்.


No comments :

Post a Comment