இனி மார்க்கெட்டிங்தான் ஜெயிக்கும்
அதிரிபுதிரியாக வெற்றியடைந்து சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறது ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்திருக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்திப் படம். அதனாலேயே கொஞ்சம் அழுத்தமாக இந்தப் படம் தொடர்பாக நடைபெற்ற விஷயங்களை ஆராய வேண்டியிருக்கிறது. காரணம், இனி வரும் காலங்களில் இந்திய சினிமாவின் மார்க்கெட் எப்படியிருக்கும் என்பதற்கு இந்தப் படம்தான் உதாரணமாக விளங்கப் போகிறது. முதலில், ‘பெய்ட் பிரிமீயர் ஷோ’. குறிப்பிட்ட சில நகரங்களில் உள்ள மல்டி ப்ளக்ஸில் பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் மாலைக் காட்சியாக ஸ்பெஷல் டிக்கெட் விலையில் ரசிகர்களுக்காக படத்தை திரையிடுவார்கள். இதுதான் ‘பெய்ட் பிரிமீயர் ஷோ’. அப்படி ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படமும் திரையிடப்பட்டது. இதன் மூலம் கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா? ரூ.6.75 கோடி! இதற்கு முன்னர் ‘த்ரி இடியட்ஸ்’ திரைப்படம், இந்தவகையான ‘பெய்ட் பிரிமீயர் ஷோ’வில் வசூலித்த மூன்று கோடி ரூபாயே சாதனையாக இருந்தது. அதை இந்தப் படம் உடைத்தெறிந்திருக்கிறது.அதேபோல் முதல் வார இறுதியில் அதாவது, மூன்றே நாட்களில் ரூபாய் நூறு கோடியை வசூலித்து ஒட்டுமொத்த திரையுலகையும் இந்தப் படம் குலுக்கியிருக்கிறது. போலவே வெளிநாட்டில் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 50 கோடியை வசூலித்திருக்கிறது. ரிக்கார்ட் பிரேக். இது எப்படி சாத்தியமாயிற்று? சிம்பிள். உள்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தை வெளியிட்டார்கள். அதாவது, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தியேட்டர் என்ற விகிதத்தில் ரிலீஸ் செய்தார்கள். இதனால், படத்தின் ரிசல்ட் தெரிவதற்குள் பெரும்பாலான மக்கள் படத்தை பார்த்துவிட்டார்கள். வெளிநாட்டை பொறுத்தவரை இந்தப் படம் புதிய பாதையை வகுத்திருக்கிறது. இந்தியில் என்று வெளியானதோ, அதே நாளில், ஆங்கிலம், பிரென்ச், ஸ்பானிஷ், அராபிக், ஜெர்மன், ஹீப்ரு, டச், தர்கீஷ், மலாய்... என பத்து மொழிகளில் இந்தப் படம் ‘டப்’ செய்யப்பட்டு ரிலீசானது. அதே போல் இதுவரை எந்த இந்தியப் படங்களும் திரையிடப்படாத நாடுகளையும் தேடிப் பிடித்து ரிலீஸ் பட்டியலில் இணைத்திருக்கிறார்கள். மொராக்கோ, ஜெர்மனி, இஸ்ரேல், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், பெரு... என ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வெளியான நாடுகளின் பட்டியலை பார்க்கும்போது
பிரமிப்பே ஏற்படுகிறது.
இதுபோக அமெரிக்காவில் 195, இங்கிலாந்தில் 175, மத்திய கிழக்கு நாடுகளில் 55, ஆஸ்திரேலியாவில் 30 தியேட்டர்களில் இப்படம் ரிலீசானது தனி. ஒன்றுமில்லை ஜென்டில்மேன். பக்காவாக யோசித்து மார்க்கெட்டிங் செய்திருக்கிறார்கள். அதுதான் விஷயம். இந்திய நிலப்பரப்பையே கணக்கில் கொண்டு கதைக்களம். மும்பை டூ ராமேஸ்வரம் திரைக்கதையின் பயணம். போதாதா? மொழி, இனம் கடந்து அனைவரையுமே ‘இது நம்ம படம்’ என்று உணர வைத்து விட்டார்கள். இப்படி ப்ளு பிரின்ட் தயாரானதும் பிராண்டிங்கில் இறங்கினார்கள். அதாவது, படத்துக்குள் இடம்பெறும் விளம்பரங்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் பார்த்தவர்களுக்கு ‘நோக்கியா’ செல்போன், ஒரு கேரக்டராக வந்திருப்பது புரியும்.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் பல கோடி ரூபாய்களை தயாரிப்பாளர்களுக்கு மொய் எழுதியிருக்கிறது. இது ஒரு சாம்பிள்தான். இப்படி பெரியதும், சின்னதுமாக படம் முழுக்க கிட்டத்தட்ட 40 நிறுவனங்கள் பிராண்டிங் செய்திருக்கின்றன. படத்தில் இடம்பெறும் தமிழக கிராமத்தின் சுவரில் துணிக்கடை, சிமென்ட் கம்பெனிகள் உட்பட பலவற்றின் விளம்பர வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு எழுத்துக்கும் லட்சக்கணக்கில் காசு சாமி காசு. கடைசியாக, படப்பிடிப்பின்போதே இது ரம்ஜான் ரிலீஸ் என அறிவித்துவிட்டார்கள். அதாவது, விழாக்காலம். மக்கள் கொண்டாட்டத்தைத்தான் விரும்புவார்கள். ஸோ, அதற்குத் தகுந்தபடி படத்தையும் திருவிழா மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். கொஞ்சம் சென்டிமென்ட், நிறைய காமெடி, இரு குத்துப் பாடல்கள், ரசிக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள். இந்த ஃபார்முலாவில் இருந்து ஒரு இன்ச் கூட மாறுபட்டு படத்தை எடுக்கவில்லை.
குறிப்பாக நெஞ்சை பிழிய வைக்கும் க்ளைமாக்ஸை வைக்கவேயில்லை. ஃபெஸ்டிவல் நாளில் ஜாலியாக ஒரு சினிமா. அவ்வளவுதான். இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். படம் நெடுக தமிழ் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், எங்குமே சப் டைட்டில் போடவில்லை. வட மாநிலத்தவர்களுக்கு இது புரியாமல் போய்விடுமோ என்றும் யோசிக்கவில்லை. கதாநாயகியையே ‘சப் டைட்டில்’ ஆக மாற்றி விட்டார்கள். மற்ற கதாபாத்திரங்கள் தமிழில் பேசும்போது, அவர்கள் எதைப் பற்றி உரையாடுகிறார்கள் என்பதை ஹீரோவுக்கு (அதாவது, ரசிகர்களுக்கு) இந்தியில் அவர் விளக்குவார். பிரமாதமான ஐடியா. இதன் மூலமாக மொழிப் பிரச்னை தலைதூக்காதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டி கழித்துப் பார்க்கும்போது ஒரேயொரு விடைத்தான் கிடைக்கிறது.
மார்க்கெட்டிங். எந்த அளவுக்கு ஒரு படத்தை சந்தைப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்கலாம். காரணம், இனிமேல் இந்தியாவில் சினிமா என்பது ‘கலைப் படைப்பல்ல’. பிராடக்ட். பொருள். அதை குட்டிக்கரணம் அடித்தாவது விற்பதுதான் ஒரே வழி. பேனா, பென்சிலில் தொடங்கி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரை சகலத்தையும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ முறையில்தான் பயன்படுத்துகிறோம். இதற்குத்தான் பழகியும் வருகிறோம். எந்தப் பொருளையும் ஆண்டுக்கணக்கில் பராமரிப்பதும், பொக்கிஷமாக கண்கள் கசிய அள்ளி அணைப்பதும் இன்று சாத்தியமில்லை. அப்படி செய்பவர்களை ‘கிறுக்கர்கள்’ என ஒரே வார்த்தையில் தூக்கிப் போட்டு மிதிக்கவே அனைவரும் விரும்புகிறோம். இதுதான் யதார்த்தம். சினிமாவும் அப்படித்தான். ஒரே வாரம். ‘யூஸ் அண்ட் த்ரோ’. சந்தையின் இந்த இயல்புக்கு ஏற்றபடி ஆட்டம் ஆட தெரிந்தவர்களே இனி ஜெயிப்பார்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்த உண்மையைத்தான் அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment