நிழல் வேட்டை

No comments
அதீத கற்பனை கலந்த ஆக்ஷன் சாகச படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்ணை மூடிக் கொண்டு ‘த மார்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ்’ (The Mortal Instruments: City of Bones) ஹாலிவுட் படத்துக்கு செல்லுங்கள். திகட்டத் திகட்ட புது அனுபவத்தை ருசிப்பீர்கள். படம் வெளியாவதற்கு முன்பே இப்படி அறுதியிட்டு சொல்லக் காரணம், ஒன்றே ஒன்றுதான். அது ‘த மார்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்’ பாகங்கள். டீன் ஏஜ் இளைஞர்களுக்காக மொத்தம் ஆறு பாகங்களில் உருவான நாவல் இது. இதில் ஐந்து பாகங்கள் வெளியாகிவிட்டன.

ஆறாவது பாகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ள நேரத்தில்தான், முதல் பாகம் திரைப்படமாக வெளிவருகிறது.
கிளாரி என்ற இளம்பெண் தன் நண்பர்களுடன் நைட் கிளப்புக்கு செல்கிறாள். அங்கு ஒரு கொலையை பார்க்கிறாள். அதிர்கிறாள். காரணம், அவள் அருகில் அவளது நண்பர்கள் இருந்தபோதும் அவளுக்கு மட்டும்தான் அந்தக் கொலை தெரிகிறது. அவள் மட்டும்தான் அதற்கு சாட்சி. கொலையை செய்தவன், நிழல்களை வேட்டையாடுபவன். அவன் கிளாரியின் அம்மாவையும் கடத்தி விடுகிறான். ஏனெனில், அவள் அம்மாவுக்குத்தான் ‘மார்டல்’ கோப்பை இருக்கும் இடம் தெரியும். திகைக்கும் கிளாரிக்கு மெல்ல மெல்ல பல உண்மைகள் தெரிய வருகின்றன. அதற்கு அந்தக் கொலைகாரன் போலவே இருக்கும் நிழல் வேட்டைக்காரர்களில் சிலர் உதவுகிறார்கள். அறியும் நிஜங்கள் கிளாரியை பதற வைக்கின்றன. அவள் அம்மாவும் ஒரு நிழல் வேட்டைக்காரிதான். எதன் காரணமாகவோ தன் மகள் கடந்தகாலத்தையோ அல்லது தங்கள் குடும்ப பாரம்பரியத்தையோ தெரிந்து கொள்ளக் கூடாது என்று மறைத்திருக்கிறாள்...
வெலவெலத்துப் போகும் கிளாரி, அடுத்த பயங்கரத்தை நேருக்கு நேர் சந்திக்கிறாள். அது அவளை அப்படியே புரட்டிப் போடுகிறது. யெஸ், அவளும் ஒரு நிழல் வேட்டைக்காரிதான்! அதாவது, பாதி தேவதை... பாதி மனித வீரர்... இப்போது கடத்தப்பட்ட தாயையும் மீட்க வேண்டும். கூடவே அம்மா மறைத்து வைத்திருக்கும் மார்டல் கோப்பையை எதிரிகள் கைப்பற்றி விடாமலும் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, தன்னுள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவது, பயிற்சி பெறுவது, கூர் தீட்டுவது. இதற்கு கிளாரியின் நிழல் வேட்டைக்கார நண்பர்கள் உதவுகிறார்கள். இதன் பிறகு என்ன நடக்கிறது... என்பதுதான் இந்த முதல் பாகத்தின் கதை.

ஹைவேஸில் ஸ்பீட் பிரேக்கர் இன்றி பறப்பது போல் வேகமாகச் செல்லும் இந்த ஃபேன்டஸி ஆக்ஷன் நாவலின் பாகங்களை எழுதியிருப்பவர் ஜூடித் ரம்மெல்ட். இப்படி சொன்னால் ஈ, எறும்புக்குக் கூட தெரியாது. அதுவே இவரது புனைப் பெயரான கசன்ட்ரா க்ளாரி (Cassandra Clare) என்று குறிப்பாகச் சொன்னால் சட்டென்று ஆங்கில வாசகர்கள் துள்ளிக் குதிப்பார்கள். ‘அட’ என வியப்பார்கள். காரணம், நாவல்களை இவர் எழுதியது புனைப்பெயரில்தான். இதற்குப் பின்னால் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. ஈரானில் வசித்த அமெரிக்க தம்பதிகளுக்கு பிறந்தவர் ஜூடித். அப்பா, பிசினஸ் காலேஜில் பேராசிரியர். தாத்தா, திரைப்படத் தயாரிப்பாளர். யூத குடும்பம். ஆனால், மதப்பற்று கிடையாது. சிறுவயதில் ஸ்விட்சர்லாந்து, இங்கி லாந்து, பிரான்ஸ் என சுற்றியிருக்கிறார். ஆனால், மேல்நிலைக் கல்வியை அமெரிக்காவில்தான் படித்தார். கல்லூரி நாட்களிலேயே பத்திரிகையாளராக வேண்டும் என்றுதான் ஜூடித் விரும்பினார். அதற்கு ஏற்ப வேலையும் கிடைத்தது. ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ உட்பட பல பத்திரிகைகளில் வேலை பார்த்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்தபோதுதான் அந்த விபரீத ஆசை வந்தது. இவருக்குப் பிடித்த இரு நாவல்கள், ‘ஹாரி பாட்டரு’ம், ‘த லார்ட் ஆஃப் ரிங்’ஸும்.
அமெரிக்காவில் ஒரு வழக்கம் உண்டு. யாருக்காவது ஒரு நாவல் பிடித்துவிட்டால் போதும். அந்த நாவலின் கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் வைத்து சொந்தமாக ஒரு நாவலை எழுதலாம். அதை இணையதளத்திலும் வெளியிடலாம். இதற்கு குறிப்பிட்ட அந்த எழுத்தாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவசியமில்லை. சும்மா ஜாலிக்காக தொடங்கப்பட்ட இந்த பழக்கம் இப்போது ஜுரம் போல் பலரையும் தொற்றியிருக்கிறது. இதிலிருந்து ஜூடித்தும் தப்பவில்லை. கசன்ட்ரா க்ளாரி என்னும் புனைப்பெயரில் இணையதளத்தில் ஒரு வலைப்பக்கத்தை தொடங்கினார். ஹாரி பாட்டரை மையமாகக் கொண்டு ‘த டிராகோ டிரையாலஜி’ என்னும் நாவலையும், ‘த லார்ட் ஆஃப் ரிங்ஸை’ அடிப்படையாகக் கொண்டு ‘த வெரி சீக்ரெட் டைரிஸ்’ என்னும் புதினத்தையும் அதில் எழுதினார். படித்தவர்கள் பாராட்டினார்கள். மறுமொழியில் உச்சி முகர்ந்தார்கள். நாலா திசையிலிருந்தும் இன்ப மழை பொழிந்தது. தன்னாலும் ஃபேன்டஸி நாவல்கள் எழுத முடியும் என்று மனதார நம்பினார்.

இந்த நேரத்தில் இவரது மனசாட்சி சரமாரி யாக கேள்விகளை கேட்டது. ‘என்னதான் இருந்தாலும் நீ எழுதினது இன்னொருவரின் கற்பனையை அடிப்படையாகக் கொண்டுதானே..?’ தலை குனிந்தவர், தன் தவறை உணர்ந்தார். அடுத்த நொடியே இணையத்தில், தான் எழுதிய அந்த இரு நாவல்களையும் அழித்தார்! அதே சமயம், இப்படி எழுதிப் பழகியதுதான் தனக்கு கை கொடுக்கப் போகிறது என்பதையும் துல்லியமாக உணர்ந்தார். அதுவேதான் நடந்தது. மடமடவென்று சொந்தக் கற்பனையில் 2004ம் ஆண்டு ஒரு நாவலை இவரால் எழுத முடிந்தது. அதுதான், ‘த மார்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ்’. படித்துப் பார்த்த பதிப்பகத்தின் நாசி வியர்த்தது. யாரும் சொல்லாமலேயே அது பொன்முட்டையிடும் வாத்து என்பது புரிந்தது. உடனே அச்சிட்டார்கள். 2007ம் ஆண்டு வெளியிட்டார்கள்.

பிறகென்ன... உலகமே பற்றி எரிந்தது. இளைஞர்கள் அந்த நாவலை கொண்டாடித் தீர்த்தார்கள். சூட்டோடு சூடாக அடுத்தடுத்த பாகங்களையும் வெளியிட்டு கல்லாவை நிரப்பிக் கொண்டார்கள். நிரப்பியும் வருகிறார்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று காத்திருந்த ஹாலிவுட், கப்பென்று ரைட்ஸ் வாங்கி திரைப்படமாக எடுக்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஒரு சிக்கல். இந்த பாகங்களின் மையம் ஹீரோ அல்ல. ஹீரோயின். எனவே, கதாநாயகிக்கு
பதில், கதாநாயகன் என மாற்றிவிடலாமா என்று பல ஸ்டூடியோக்கள் கேட்டிருக்கின்றன. முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார் ஜூடித் என்கிற கசன்ட்ரா க்ளாரி. பிறகு ஒருவழியாக நாவலில் இடம்பெற்றது போலவே ஹீரோயின் படமாக எடுக்க முன்வந்தார்கள். நெதர்லாந்தில் பிறந்து நார்வேயில் வளர்ந்தHarald Zwart இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2010ல் வெளியான ‘த கராத்தே கிட்’, ‘த பிங்க் பேன்த்தர் 2’ உட்பட பல படங்களை இயக்கியிருக்கும் இவர் சோனி பிக்சர்ஸின் செல்லப் பிள்ளை! ஸோ, இந்தப் படத்தையும் சோனிதான் பிரபஞ்சம் எங்கும் வெளியிடுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்கி நவம்பரில் முடித்துவிட்டார்கள். அதன் பின்னர் படத்துக்கு என்ன தேவை என்பதை கிராஃபிக்ஸ் பார்த்துக் கொள்ளும் என திடமாக நம்பினார்கள். நம்பினார் கெடுவதில்லை. படத்தில் சிஜி பிரமாதமாக வந்துள்ளதாம். படம் வெளியாவதை ஒட்டி செல்ஃபோனில் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மார்க்கெட்டிங் உத்தி கைகொடுத்திருக்கிறது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் நாவலின் முதல் பாகத்தை இந்த மாதம் திரையிட்ட கையோடு அடுத்த மாதம் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை தொடங்குகிறார்கள். இந்த செகண்ட் பார்ட், அடுத்த வருடம் வெளியாகும். தேதியையும் அறிவித்துவிட்டார்கள்.

வேறு வழியில்லை. இப்படித்தான் நடக்கும். இனி வரும் ஆறு ஆண்டுகளுக்கு, வருடத்துக்கு ஒரு வைர முட்டை வீதம் ‘த மார்ட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்’ பாகங்கள் போட்டபடியேதான் இருக்கும். பிரச்னைகள் தலைவிரித்தாடும் போதுதான் கற்பனை உலகில் மனிதர்கள் தஞ்சமடைவார்கள். சஞ்சரிப்பார்கள். இந்த நூற்றாண்டே சிக்கல்களின் காலமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும், அடிப்படை உணவின் விலையேற்றமும், பொருளாதார மந்தமும் உலக மக்களை பிச்சைக்காரர்களாக்கி வருகின்றன. இதிலிருந்து தப்பிக்க மாயமான உலகை ஹாலிவுட் உருவாக்கி அதில் வசிக்கச் சொல்கிறது. கூரை இல்லாதவனுக்கு கனவில் கூரை கிடைத்த கதைதான். ரைட். பசி வந்திட பத்தும் பறந்து போகும். எனவே, அதீத கற்பனை கலந்த ஆக்ஷன் சாகச படங்களும் ஜெயிக்கும். ‘த மார்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ்’ படம் ஒருவேளை அதற்கு உதாரணமாக அமையலாம்.


No comments :

Post a Comment