ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்

No comments
தமக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்றும் நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில், "எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் எதையும் போட வேண்டாம்.

இதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நேரடியாக நானே சம்பந்தப்படுவேன். என் தந்தையோ வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

விஜய்யின் சமீபத்திய 'தலைவா' திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலே அவரை இவ்வாறு கூற வைத்துள்ளதாக தெரிகிறது.

'தலைவா' படத்தின் விளம்பரத்தின் கீழ் 'Time to lead' ( தலைமையேற்கும் தருணம் ) என்று போடப்பட்ட வாசகமும், அப்படத்தில் விஜய் அரசியலுக்கு வர மக்கள் அழைப்பதுபோன்று இடம்பெற்ற சில காட்சிகளும் ஆளும் தரப்பை வெகுவாக ஆத்திரப்பட வைத்ததாகவும், அதன் காரணமாகத்தான் படத்திற்கு மறைமுக முட்டுக்கட்டைகள் விழுந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் படம் தமிழகத்தில் வெளியாவதில் ஏற்பட்ட தடங்கல், நடிகர் விஜய்க்கு கடும் நெருக்கடியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாகவும், இதனால் கடைசியில் ஆட்சி மேலிடத்திடம் சரணடைந்ததாகவும், அதன் காரணமாவே படத்தின் விளம்பரத்தின் கீழ் 'Time to lead' ( தலைமையேற்கும் தருணம் ) என்று போடப்பட்ட வாசகம் நீக்கப்பட்டதோடு, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை புகழ்ந்து அறிக்கை ஒன்றும் விஜய்யிடமிருந்து பறந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இதனிடையே தற்போது ஏற்பட்ட சிக்கல், இனி விஜய்யின் அடுத்த படங்களுக்கும் வராமல் இருப்பதற்காக தெளிவான நிலையை அறிவிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து மட்டுமல்லாது, ஆளும் தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கலாம்.

எனவே, இதன் காரணமாகவே இத்தகைய அறிவிப்பை விஜய் வெளியிட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments :

Post a Comment