சென்னை எக்ஸ்பிரஸ்

No comments
வடநாட்டு ராகுலுக்கும் நம்மூர் மீன லோசினிக்குமான லவ்தான் சென்னை (ஸ்பீட்) எக்ஸ்பிரஸ். மிட்டாய் வாலா குடும்பத்தைச் சேர்ந்த ஷாரூக்கின் தாத்தா இறந்துவிட, அவரது அஸ்தியை, பாட்டியின் ஆசைப்படி ராமேஸ்வரத்தில் கரைக்க முடிவு செய்கிறார்கள். ஷாரூக்கிற்கு நண்பர்களுடன் கோவா செல்ல திட்டம். பாட்டிக்காக மும்பையில் இருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, கல்யாண் ஸ்டேஷனில் இறங்க முடிவு செய்கிறார் ஷாரூக். ப்ளான்படி அங்கு நண்பர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் அப்பா பார்த்திருக்கும் மாப்பிள்ளை பிடிக்காமல் உறவினர் வீட்டுக்கு தப்பிக்கும் தீபிகாவை, அப்பாவின் ஆட்கள் மடக்க, அதே ரயிலில் ஏற வருகிறார் தீபிகா. கைதூக்கிவிடும் ஷாரூக் அவரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்பா சத்யராஜிடம், ‘இவர் என் காதலர்’ என்று தீபிகா கதைவிட, அதை எப்படி ஷாரூக் உண்மையாக்குகிறார் என்பது கதை.


அப்பாவியாக அறிமுகமாகிறார் ஷாரூக். தீபிகாவுக்கு இந்தி தெரியாது என்று அவரை வர்ணிக்கும் தொடக்க காட்சியே பரபரவென ஒட்டிக்கொள்கிறது. அப்போது வரும் ஷாரூக்கின் பழைய பாடலான, ‘துஜே தேகா துயே ஜானா சனம்’ பின்னணி இசை ரசனை. தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமல் முழிப்பது, தீபிகாவிடம், சப்டைட்டில் என்று மொழிபெயர்ப்பை கேட்பது, வில்லனை பார்த்ததும் ‘இவ்வளவு பெரிய ஆளா‘ என்று நடுங்குவது, தீபிகாவை காப்பாற்ற அவர் செய்யும் சீரியஸ் விஷயங்கள் காமெடியாவது என ஷாரூக் நடிப்பில் அப்படியொரு யதார்த்தம்.  சேலை மற்றும் தாவணியில் வரும் தீபிகாவிடம், தமிழ் அழகு. இந்தியை கடித்து அவர் பேசுவதும், அர்த்தம் புரியாமலேயே ஷாரூக் குங்குமம் வைக்கும்போது கண்களால் நடிப்பதும் கிளைமாக்ஸில், ‘என் மீனாவுக்காக எதையும் செய்வேன்’ என்று சொல்லும்போது தவிக்கிற தவிப்பிலும் தீபிகா, கொள்ளை கொள்கிறார் மனதை.


தாதா பெரிய தலையாக சத்யராஜ். முறைப்பிலும் முறுக்கிலுமே நடித்துவிட்டு போகிறார். பெசன்ட் ரவி, டெல்லி கணேஷ், மோகன்ராம் உட்பட நிறைய தமிழ் முகங்கள். வில்லன் கேரக்டருக்கு நிகிதின் தீர் அவ்வளவு பொருத்தம். கிளைமாக்ஸில் ஹீரோவிடம் அடிவாங்கிவிட்டு, ‘எனக்கு உடம்பு பெருசு. உனக்கு மனசு பெருசு‘ என்று பஞ்ச் அடிக்கிறார் நிகிதின். டூட்லியின் ஒளிப்பதிவு அழகழகான பிரதேசங்களை அள்ளிக்கொடுத்திருக்கிறது. விஷால் ஷேகரின் இசையில் பாடல்கள் இனிமை. அதிலும் ரஜினிக்கு டெடிகேட் பண்ணியிருக்கும் ‘லுங்கி டான்ஸ்‘ ஆட வைக்கிறது. கதை நம்மூர் இயக்குனர் கே.சுபாஷுடையது. இயக்குனர் ரோஹித் ஷெட்டி, இந்தி சினிமாவின் ஹரி. ஆக்ஷன் மசாலா படங்களை அவ்வளவு ஸ்பீடாக கொடுப்பதில் வல்லவர். இதிலும் அப்படியே. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் பிரச்னைகள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டால் ஒரு தமிழ்ப் படம் பார்த்த உணர்வை வஞ்சகமில்லாமல் கொடுக்கிறது இந்த ஜாலி எக்ஸ்பிரஸ்.

No comments :

Post a Comment