தொடர்ந்து பிளாக்மெயில் செய்து மிரட்டி என் மகளை திட்டமிட்டு மோசடி செய்தான் காதலன்

No comments
சென்னை : படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்கலாம் என அவகாசம் கொடுத்தும், என்மகளை திட்டமிட்டு மிரட்டி பிளாக்மெயில் செய்து மோசடி செய்துள்ளான் அவளது காதலன் என இயக்குனர் சேரன் கூறினார். இயக்குனர் சேரனின் 2வது மகள் தாமினி. சூளைமேட்டைச் சேர்ந்த சந்துரு என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு தன் தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், காதலனை கொலை செய்ய முயற்சித்ததாகவும் தாமினி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீஸ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தது. தற்போது தாமினி மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சேரன் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது: நான் எந்த சூழ்நிலையிலும் ஒரு தகப்பனாக என் பிள்ளைகள் மீது அதிகாரம் செலுத்தியதில்லை. ஒரு நண்பனாக, தோழனாகத்தான் இருந்தேன். நானும் காதல் திருமணம் செய்து கொண்டேன். அதனால்தான் என் இளைய மகள் தன் காதலைச் சொன்னபோது அதை ஏற்றுக்கொண்டேன். எனது இளைய மகளுக்கு எப்போதுமே எதிலுமே கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். தாழ்வு மனப்பான்மை இருக்கும்.

அந்த பையனின் குடும்பத்தினரை சந்தித்து தாமினி படிப்பு முடிய இன்னும் 3 வருடம் இருக்கிறது. அவள் பட்டதாரியாகட்டும். அந்த பையன் அதற்குள் நல்ல வேலையை தேடிக்கொள்ளட்டும். அதுவரை இருவரும் தொடர்பில் இருக்கக் கூடாது என்று சொன்னேன். ஆனால், மூன்று மாதம்கூட ஆகவில்லை. ஒரு நாள் என் மகள், ‘அப்பா அவன்கூட பேசாமல் என்னால் இருக்க முடியல’ என்றாள். அவன் சொல்லிதான் என் மகள் இவ்வாறு நடந்து கொண்டாள் என்பது பின்னர் தெரிந்தது.

அவனைப் பற்றி விசாரித்தபோதுதான் அவனது குற்ற பின்னணி தெரியவந்தது. ஏற்கெனவே கடந்த 2 வருடங்களில் 3 பெண்களை ஏமாற்றி இருக்கிறான். அவர்களும் போலீசில் புகார் செய்து அங்கு செட்டில்மென்டாகி இருக்கிறது. என் இளைய மகளை காதலிக்கும்போதே பேஸ்புக் சாட்டில் என் மூத்த மகளுக்கு ஐ லவ் யூ சொன்னான். காதலிக்கும் என் மகளை பற்றியே பல இடங்களில் தவறாக பேசியுள்ளான். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவனைப் பற்றி தெரிந்த பிறகுதான் என் மகளே அவன்மீது சைபர் கிரைமில் புகார் செய்தாள். மன அழுத்தத்துக்கு ஆளாகி பத்து நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள்.

நீ என்னை விட்டு பிரிந்தால் உன் தந்தையின் ஆட்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று அவளை மனரீதியாக பயமுறுத்தி வைத்திருக்கிறான். என் மகளை அவன் பிளாக்மெயில் செய்கிறான் என்று தோன்றுகிறது. இரவில் தினமும் 8 பெண்களுடன் பேசியிருக்கிறான். அந்த எண்கள் என்னிடம் இருக்கிறது. தேவைப்பட்டால் கோர்ட்டில் அதை காட்டுவேன். அவனது நடத்தை, வாழ்க்கை, பொருளாதாரம் எதையுமே எங்களால் ஏற்க முடியவில்லை.

தயாரிப்பாளர் ஞானவேல் அவரது பெட்ரோல் பங்கில் வைத்து அவனுக்கு அறிவுரை கூறினார். அப்போது அவர் அழைக்கவே, நானும் எனது மானேஜரும் சென்றோம். என்னை பார்த்ததும் எழுந்து செல்ல முயன்ற சந்துருவை என் மேனேஜர் சட்டையை பிடித்து இழுத் தார். உடனே, ‘என்னை கொல்லப் பாக்குறாங்க‘ என்று கத்தியபடியே ஓடினான். இதுதான் நடந்தது.  எந்த விதத்திலும் அவனை பழிவாங்கும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை.

காரணம் தவறு என் மகள் மீதும் இருக்கிறது. எனக்கு அந்த பையன் உயிரும் என் மகள் உயிரும் முக்கியம். அவன் தன் குடும்பத்துக்கு மகனாக திரும்ப வேண்டும்; என் மகள் என் மகளாக திரும்ப வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் அவனை ஹீரோவாக வைத்து, நான் படம் எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் கொடுத்திருக்கிறான். அதற்கு நான் மறுத்துவிட்டேன். விரைவில் ஒரு பிரபலத்தை அசிங்கப்படுத்தப்போகிறேன் என்று பேஸ்புக்கில் எழுதியிருக்கிறான்.

அவன் என் மகள் மீது கொண்டிருப்பது காதலே இல்லை. பெரிய இடத்து பெண்ணை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க நினைக்கிறான். தன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள நினைக்கிறான். இவ்வாறு சேரன் கூறினார். நிருபர்களிடம் பேசும்போது சேரன், அவரது மனைவி செல்வராணி, அமீர் ஆகியோர் கண்கலங்கினார்கள். பேட்டியின்போது இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சுப்பிரமணியம் சிவா, ராம், பாடலாசிரியர் சினேகன், தயாரிப்பாளர் ஞானவேல் உடன் இருந்தனர்.      

‘மகளை காப்பாற்றுங்கள்’

சேரன் மனைவி, செல்வராணி கூறும்போது, ‘‘அந்த பையன் திருந்த மாட்டான். ஒரு கெட்டவன் கையில் என் பெண்ணை கொடுக்க மாட்டேன். ஒரு தாயாகக்கூட இல்லை, ஒரு பொண்ணாக உங்களிடம் கேட்கிறேன் சேரன் என்கிற அடையாளத்தை தூக்கிப்போட்டுட்டு என் மகளை காப்பாற்றுங்கள்’’ என்றார்.

No comments :

Post a Comment