மந்திரவாதியை வெல்லும் குட்டீஸ்

No comments
பெல்ஜியத்தை சேர்ந்த பெயோ என்பவரால் உருவாக்கப்பட்ட ஸ்மர்ஃப்ஸ் என்கிற கேரக்டர் வெளிநாடுகளில் பிரபலம். குழந்தைகளை கவர்ந்திருக்கும் இந்த கேரக்டர்களை வைத்து, ‘தி ஸ்மர்ஃப்ஸ்’ என்ற படம் 2011,ல் வந்து பாராட்டை பெற்றது. அதன் இரண்டாம் பாகமான இந்தப் படத்தை முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இன்னும் கலக்கலாக எடுத்திருக்கிறார்கள்.

 தங்களுக்கென இருக்கும் தனி உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்மர்ஃப்ஸ், மந்திரவாதியின் கண்ணில் இருந்து எப்படி தப்பிக்கிறது என்பதை முதல் பாகத்தில் சொல்லியிருந்தார்கள். இரண்டாம் பாகத்தில் கதையை இன்னும் நீட்டியிருக்கிறார்கள். மந்திரவாதி இரண்டு ஸ்மர்ஃப்சை உருவாக்குகிறான். அவற்றை அதன் உலகத்துக்குள் அனுப்பி அங்கு வசிக்கும் பெண் ஸ்மர்ஃப்சான, ஸ்மர்ஃப்ட்டியை பாரிஸுக்கு கடத்திச் செல்கிறான்.

அவளை காப்பாற்ற ஸ்மர்ஃப்ஸ் குழு ஒன்று நகரத்துக்கு வருகிறது. அங்குள்ள சிலரது உதவியுடன் அவளை எப்படி கண்டுபிடித்து மீட்கிறார்கள் என்பதுதான் கதை. ஸ்மர்ஃப்ஸின் தனி உலகம், அவர்களுக்குள்ளான சென்டிமென்ட், மந்திரவாதியின் வில்லத்தனம் என ஒரு தமிழ்ப் படத்தை வித்தியாசமாக பார்த்த உணர்வை தருகிறது, ‘தி ஸ்மர்ஃப்ஸ் 2’. அனிமேஷன் படம் என்றாலும் அந்த கேரக்டர்களையும் நிஜ மனிதர்களையும் இணைத்து படமாக்கியிருப்பது ரசனையாக இருக்கிறது.

அவர்கள் பண்ணும் அலப்பறைகளும் சேட்டைகளும் ரசிக்க வைக்கின்றன. முதல் பாகத்தில் கணவன் மனைவியாக நடித்த நீல் பேட்ரிக்கும் ஜெய்மாவும் இதிலும் அப்படியே வருகிறார்கள். மந்திரவாதி ஹாங்க் அஜாரியா உட்பட அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய ராஜா கோஸ்நெல்தான் இதையும் இயக்கியுள்ளார்.

 குழந்தைகளுக்கான படம் என்றாலும் பெரியவர்களை ரசிக்க வைக்க பெரும்பாடு பட்டிருக்கிறது படக்குழு. இருந்தாலும் இதற்கு கிடைத்திருக்கிற வரவேற்பை அடுத்து மூன்றாம் பாகத்தையும் எடுக்க இருக்கிறார்களாம். தினகரன் விமர்சனக்குழு.

No comments :

Post a Comment