என்னுள் என்ன மாற்றமோ ? - திரைவிமர்சனம் (ஈழத்து திரைப்படம்)

No comments
மிக மிக நீண்டதொரு இடைவெளிக்கு பின்னர் ஈழத்திலிருந்து அதுவும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்திருக்கும் முழு நீள திரைப்படம் “என்னுள் என்ன மாற்றமோ ?” நல்லூரான் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் கவிமாறன் இயக்கத்தில் படம் வெளிவந்திருக்கிறது.இங்கிருக்கும் குறைவான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் , அந்த இரண்டையுமே கதைக்கு ஏற்ப வெகு லாவகமாக பயன்படுத்தி திரைப்படமாக திரைக்கு கொண்டுவந்த படக்குழுவின் உழைப்புக்கு ஒரு சல்யூட்.

படம் சிறப்பு காட்சிகளாக மட்டுமே குறிப்பிட்ட தினங்களில் யாழ். ராஜா திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய தினம் பிற்பகல் 2.30 காட்சியை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. எதிர்பார்த்து சென்றதை விடவும் அதிகளவான கூட்டம் திரையரங்கில் இருந்தது. அநேகமாக இங்கிருந்து வரும் குறும்படங்கள் கூட பெரிதாக மக்களை சென்றடைவதில்லை. காரணம் மிக குறைவான மார்கெட்டிங். “என்னுள் என்ன மாற்றமோ திரைப்படத்திற்கு வந்திருந்த கூட்டத்தை பார்த்தபோது மார்கெட்டிங் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

படத்தின் கதையை பார்த்தால், தமிழ்சினிமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து சொல்லப்பட்டுவரும் காதல் - பெற்றோர் எதிர்ப்பு - வில்லன் என்ற வழக்கமான கதைதான். ஆனால் காட்சிப்படுத்திய விதம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லலாம். பெற்றோர் இல்லாமல், கார் மெக்கானிக் ஒருவரால் வளர்க்கப்படும் கதாநாயகன், பெரிய தொழிலதிபரின் மகள் கதாநாயகி இருவருக்கும் இடையே ஆரம்பிக்கும் நட்பு வழக்கம்போல நாட்போக்கில் காதலாகிறது. காலேஜில் கதாநாயகனுக்கு விரோதியாக இருக்கும் சக மாணவன் இவர்கள் காதலை கதாநாயகியின் வீட்டில் போட்டுக்கொடுத்துவிட  பிரச்சினை வெடிக்கிறது. கதாநாயகியின் தந்தை ஒரு பக்கம் முறுக்கிக்கொண்டு நிற்க, அவளிடம் ஏற்கனவே காதலை சொல்லி மறுக்கப்பட்ட முறைப்பையன் வேறு வில்லத்தனம் பண்ணுகிறான். இவர்களை தாண்டி இருவரின் காதல் வென்றதா? அல்லது பிரிந்ததா?  என்பதை திரையில் காணுங்கள். 

படம் ஆரம்பித்ததில் இருந்து கலேஜில் மாணவர்கள் அடிக்கும் லூட்டிகள், கதாநாயகன் டீமுக்கும், மற்றுமோர் மாணவர் டீமுக்கும் நடக்கும் மோதல்கள் என ஓரளவு சுவாரஷ்யத்துடன், போரடிக்காமல் கதையை நகர்த்திச்சென்ற விதம் அருமை. பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். மூன்று அழகான பாடல்கள் இசையிலும் சரி, காட்சிப்படுத்திய விதத்திலும் சிறப்பாகவே இருக்கின்றது. பின்னணி இசை சில இடங்களில் எரிச்சலூட்டினாலும் நன்றாக இருக்கிறது.

கதாநாயகனாக நடித்த கவிமாறனின் நடிப்பு பாராட்டத்தக்கது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் கிளைமாக்ஸில் அவரது நடிப்பு அட்டகாசம்.  எல்லோரிலும் எனக்கு பிடித்தது கதாநாயகனின் நண்பராக வருபவரின் லொள்ளுத்தனமான நடிப்புத்தான். ஆனால் படத்தில் ஒரு சில காட்சிகளையே அவருக்கு கொடுத்து வீணடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. லொகேஷன் தெரிவில் அசத்தியிருக்கிறார்கள். 

குறை என்று பார்க்கப்போனால், ஹீரோயிசம், ரவுடிசத்தை தேவையில்லாமல் கதைக்குள் கொண்டுவந்ததை சொல்லாம். இரண்டும் படம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதைவிட படத்தில் ஈழத்து தமிழை உபயோகிப்பதா இந்திய தமிழை உபயோகிப்பதா என குழம்பியிருப்பது தெரிகிறது. இரண்டுமே மாறி மாறி வந்துபோகிறது. 

மொத்தத்தில், நீண்ட நாட்களுக்கு பின்னர் வந்த யாழ்ப்பாண திரைப்படம் என்ற வகையில் எதிர்பார்ப்பிற்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். யாழ்ப்பாணத்தில் குறும்படங்களுடன் முடங்கிப்போயிருந்த பலர் “என்னுள் என்ன மாற்றமோ?” வின் வெளியீட்டுக்கு பின்னர் உற்சாகம் கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. All is well

கொசுறு : படத்தில் மைனஸ் என்று பார்க்கப்போனால் ஏராளம் இருக்கிறது. ஆனால் இது நீண்ட காலத்தின் பின்னர் ஒரு முயற்சி. இதில் குறைகளை தூக்கிப்பிடிப்பது சரியாக இருக்குமா என்று பலதடவை யோசித்தேன். ஆனால் குறைகளை தவிர்த்துவிட்டு படத்தை ஒரேயடியாக பாராட்டித்தள்ளுவது தவறான ஒரு காரியம். அதனால் பிரதானமாக தென்பட்ட குறையை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்

சிறகுகள் 

No comments :

Post a Comment