எங்களுக்கும் ராயல்டி வேண்டும்: பாடகர்கள் திடீர் போர்க்கொடி
தற்போது பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் ராயல்டி பெற்று வருகிறார்கள். அதாவது ரேடியோ, தொலைக்காட்சி உள்பட எந்த இடத்திலும் கமர்ஷியல் நோக்கத்துக்காக பாடல் ஒலிபரப்பப்பட்டால் அந்த பாடலை எழுதிய பாடலாசியரிருக்கும், இசை அமைத்த இசை அமைப்பாளருக்கும் ராயல்டி வழங்கப்படுகிறது. ஒரு பாடலுக்கு பத்து பைசா, ஐந்து பைசாதான் ஆனால் அதுவே ஒரு மாத்தில் பல்பெருகி நிற்கும். வைரமுத்து, நா.முத்து-குமார் போன்ற பாடலாசிரியர்கள் லட்சகணக்கில் ராயல்டி பெற்று வருகிறார்கள். இசை அமைப்பாளர்களும் லட்சக் கணக்கில் பெற்று வருகிறார்கள். பாடகர்களுக்கு இல்லாமல் இருந்தது.
எங்களுக்கும் ராயல்டி வேண்டும் என்று பிரபல இந்தி பின்னணி பாடகர்கள் சோனி நிகாம், ஜாவீத் அக்பர் போன்றவர்கள் தொடர்ந்து போராடி வந்தார்கள். அதன் பலனாக 2012ம் ஆண்டு ஜுன் மாதம் பார்லிமென்ட்டில் பாடகர்களுக்கும் ராயல்டி வழங்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டு
நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் 2012ம் ஆண்டு செப்டம்பர் 5ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்திய பாடகர்கள் உரிமை சங்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக லதாமங்கேஷ்கர் நியமிக்கப்பட்டார். அதன் மானேஜிங் டைரக்டராக சஞ்சய் டேன்டன் நியமிக்கப்பட்டார். இந்த அமைப்புதான் ராயல்டிகளை பெற்று பாடகர்களுக்கு வழங்கும்.
ஆனால் இதுவரை எந்த நிறுவனமும் ராயல்டி வழங்கவில்லை. அதை பெறுவதற்கு இப்போது பாடகர்கள் முனைப்புடன் செயலாற்ற துவங்கி இருக்கிறார்கள். தென்னிந்தியாவின் பிரபல பின்னணி பாடகர், பாடகிகள் சென்னை நட்சத்திர ஓட்டலில் கூடி இதுபற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தினார்கள். இதில் நாம் தீவிரமாக கவனம் செலுத்தி நமக்கான உரிமையை பெற வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
கூட்டத்திற்கு பிறகு பாடகர் கே.ஜே.யேசுதாஸ். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: "மக்களை சந்தோஷப்படுத்த நாங்கள் பாடினாலும் உண்மையில் நாங்கள் பாடுவது எங்கள் வயிற்றுப்பாட்டுக்காகத்தான். பாடல் மூலம் கிடைக்கும் சம்பளம் தவிர வேறு எந்த வருமானமும் பாடர்களுக்கு கிடையாது. நாங்கள் பாடி மக்கள் தந்த பணத்தில் வசதியாக இருக்கிறோம். ஆனால் எங்கள் வருங்கால சந்ததிகளுக்காக இந்த ராயல்டி உரிமையை கேட்கிறோம். நாங்கள் ராயல்டி கேட்பதால் பாடலாசிரியருக்கோ, இசை அமைப்பாளருக்கோ, தயாரிப்பாளருக்கோ வர வேண்டியது வராமல்போகாது. அவர்களுக்கு எங்கள் கோரிக்கையால் எந்த பாதிப்பும் வராது. அரசு சட்டமாக இயற்றியதை நிறைவேற்றித் தாருங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
ரேடியோ, தொலைக்காட்சி, செல்போன் நிறுவனங்கள் எங்கள் பாடலை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது அதில் ஒரு சிறு துளியை எங்களுக்கு கொடுத்தால் என்ன என்ற நியாயமான கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்" என்றார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment