நடிகர் சங்க பொதுக்குழு நாளை கூடுகிறது: ரஜினி, கமலுக்கு அழைப்பு

No comments
நடிகர் சங்கத்தின் வரவு - செலவு கணக்கு விவரங்கள் வெளியிடப்படவில்லை என நடிகர்களில் ஒரு கோஷ்டியினர் அதிருப்தி வெளியிட்டு உள்ளனர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதிலும் சர்ச்சை ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நாளை (18-ந் தேதி) மாலை 4 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் கூடுகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார்.

 பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, தனுஷ், நயன்தாரா, திரிஷா, நாசர் உள்பட 3 ஆயிரம் பேருக்கு பொதுக்குழுவில் பங்கேற்கும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

 பொதுக்குழுவில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுக்கான நடிகர் சங்கத்தின் வரவு - செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்தும், கோர்ட்டு வழக்கு விவரங்கள் பற்றியும் சங்க நிர்வாகிகள் பேசி விளக்கம் அளிக்கிறார்கள். நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டி அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சங்க உறுப்பினர்கள் பலர் நடிகர் சங்கத்துக்கு மனுக்கள் அனுப்பி உள்ளனர். அந்த மனுக்களும் பொதுக்குழுவில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. பொதுக்குழுவில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


No comments :

Post a Comment