சினிமாவில் சுயமரியாதையுடன் இருப்பது கஷ்டம் : ரஜினி பேச்சு

No comments
பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம், ‘16 வயதினிலே‘. எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்த இப்படம், டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் ரஜினி பேசியதாவது: அந்த காலத்தில் ‘16 வயதினிலே‘ படத்தை 5 லட்ச ரூபாயில் தயாரித்தார் ராஜ்கண்ணு. அது சாதாரண விஷயம் இல்லை. படத்தை வாங்க அப்போது யாரும் வரவில்லை. 

துணிச்சலுடன் அவரே ரிலீஸ் செய்தார். பெரிய வெற்றி பெற்றது. அப்போது கமல் பெரிய ஸ்டார். ஸ்ரீதேவி பெரிய ஸ்டார். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை தயாரித்தார். பிறகு படம் தயாரிக்கவில்லை. சுயமரியாதை அதிகம் இருந்தால் சினிமாவில் இருப்பது கஷ்டம். ராஜ்கண்ணு கஷ்டத்தில் இருந்தாலும், சுயமரியாதை மிகுந்தவர். இவ்வாறு ரஜினி பேசினார். பிறகு கமல்ஹாசன் பேசும்போது, ‘‘16 வயதினிலே‘ படத்தை பார்த்து கிண்டல் செய்தவர்கள்தான் அதிகம். 

அதையெல்லாம் மீறி தயாரிப்பாளருக்கு தங்க கிரீடமே வைத்து விட்டார்கள் ரசிகர்கள். நானும், ரஜினியும் அன்று முதல் இன்றுவரை நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியே இருக்கிறது. இதன் பெருமை எங்களையே சேரும்‘ என்றார். ரஜினி சம்பளம் 3 ஆயிரம் ரூபாய்: பாரதிராஜா பேசும்போது, ‘இந்தப் படத்தில் கமலுக்கு சம்பளம் 27 ஆயிரம் ரூபாய். பரட்டை கேரக்டரில் நடிப்பதற்காக ஆள் தேடியபோது, ரஜினி கிடைத்தார். 5 ஆயிரம் சம்பளம் கேட்டார். 3 ஆயிரம் பேசி, 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தோம். 500 ரூபாய் பாக்கி இருக்கிறது. இதன் ஷூட்டிங்கில் கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுப்பார்கள். 

ரஜினிக்கு அது கூட தந்ததில்லை. அந்த நினைவுகள் இப்போது என் கண்முன் நிழலாடுகிறது. இவ்வாறு பாரதிராஜா பேசினார். விழாவில் பாக்யராஜ், பார்த்திபன், சித்ரா லட்சுமணன், சத்யஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments :

Post a Comment