இமானின் இசையில்தான் இப்போது தமிழ் இருக்கிறது

No comments
 விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடிக்கும் படம், ‘பாண்டியநாடு’. லட்சுமி மேனன், பாரதிராஜா, சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு, இமான் இசை, வைரமுத்து பாடல்கள். பாஸ்கர் சக்தி வசனம். சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

விஷாலுக்கு சில வார்த்தைகள். நல்ல கலைஞன் நீங்கள். இந்தப் படத்தில் வெற்றி பெறுவீர்கள் என்பது நிச்சயம். அதற்கு காரணம், இரண்டு. சுசீந்திரனின் மூளை, உங்களின் வேலை. சின்ன சின்ன தோல்விகளால் சறுக்கிவிடாதவர் நீங்கள். தோல்வி என்பது கற்றுக்கொள்ள. வெற்றி என்பது பெற்றுக்கொள்ள. கற்றுக்கொள்ள தோல்விகள் தேவை. அதில் இருந்து பாடம் பெற்று, வெற்றியை நோக்கி ‘பாண்டிய நாடு’ நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை அறிகிறேன். 

இங்கு இமானை புகழ்ந்தார்கள். அதை நானும் வழிமொழிகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் இசையில்தான் தமிழ் கேட்கிறது. மொழி கேட்கிறது. மொழி கேட்டால் அந்தப் பாட்டு வெற்றிபெறும். மொழி வேறு, இசை வேறு என்பதல்ல. மொழிக்குள்ளும் இசை அமைப்பாளர் இருக்கிறான். இசைக்குள்ளும் மொழி இருக்கிறது. இசை அமைப்பாளன் வெற்றிபெற்றால் பாடகன் வெற்றிபெறுகிறான். பாடகன் வெற்றிபெற்றால் பாடலாசிரியன் வெற்றிபெறுகிறான். இந்த 3 பேரும் வெற்றிபெற்றால் இயக்குனர் வெற்றிபெறுகிறான். இயக்குனர் வெற்றிபெற்றால் மக்கள் வெற்றிபெறுகிறார்கள். எனவே ஒரு வெற்றி, தனித்தனி வெற்றியல்ல. 

இயக்குனர் சீனு ராமசாமி சமீபத்தில் என்னிடம் பேசி, ‘என் பழக்கங்களை கைவிட்டுவிட்டேன்’ என்றார். ‘நீங்கள் மதுரைக்காரர். மதுரையில் மட்டும், ‘மது’ இருக்கட்டும்‘ என்றேன். இளம் இயக்குனர்கள், ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டால் உங்களை வெல்ல ஆள் கிடையாது. ‘நேற்று சபதங்களின் காரணமாக மதுக்கோப்பைகளை உடைத்துவிட்டேன். இன்று மதுக்கோப்பைகளின் காரணமாக சபதங்களை உடைத்துவிட்டேன்’ என்றொரு கவிதை உண்டு. அப்படி ஆகிவிடக் கூடாது.

இவ்வாறு வைரமுத்து பேசினார். விழாவில், கேயார், ஞானவேல்ராஜா, ஆர்.பி.சவுத்திரி, குஷ்பு, சீனு ராமசாமி, பாண்டிராஜ், சமுத்திரகனி, ரம்யா நம்பீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments :

Post a Comment