கலாட்டா காதல் - திரைவிமர்சனம்,

No comments
தேனி பக்க கிராமத்தில் இருந்து சென்னை வரும் சாப்ட்வேர் இன்ஜினியரும் லண்டனில் இருந்து வரும் பெண்ணும் சந்தர்ப்ப வசத்தால் ஒரே வீட்டில் தங்க நேர்கிறது, ஓர் அப்பாடக்கர் புரோக்கரால். எதிரும் புதிருமான இருவரும் தங்களது டிஷ்யூம்களை கடந்து ஒன்று சேர்ந்தால், அது ‘வணக்கம் சென்னை’.


அறிமுக இயக்குனர் என்பதைத் தாண்டி, தன்னை கவனிக்க வைத்திருக்கும் கிருத்திகா உதயநிதிக்கு, ஒரு வெல்கம் கிஃப்ட். இரவில் வாடகை காரில் வரும் பிரியாவை கரெக்ட் பண்ண, டிரைவர் பாட்டுப் போடுவதும் வண்டி மற்றும் டிரைவர் பற்றிய விவரங்களை பிரியா போனில் சொன்னதும் பாடல் மாறுவதுமான அழகியல் காட்சிகள் மற்றும் சந்தானத்தின் காமெடியால் களைகட்டுகிறது படம்.

சாப்ட்வேர் இன்ஜினியர், அம்மா செல்லம், பிரியாவின் டார்ச்சர் பார்ட்டி என சிவா, கலந்து செய்த கலவை. குளித்துவிட்டு வரும்போது, பிரியாவை பேய் என நினைத்து நடுங்குவது, கணவன் மனைவி என நினைக்கும் ஊர்வசி முன்பு, பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே உளறுவது என காமெடியாகவும் வேறொருவருக்கு அவள் நிச்சயிக்கப்பட்ட விஷயம் தெரிந்ததும் சோகமாகவும் நடிக்க முயற்சித்து இருக்கிறார். டைமிங் காமெடியில் தேறும் சிவா, லவ் மேட்டரில் ஃபீலாகாமலேயே இருப்பது உறுத்தல். ஹோம்வொர்க் வேணுங்க ஜி.

லண்டனில் வளர்ந்த தமிழ்ப்பெண் கேரக்டரில் அழகாக ஒட்டிக்கொள்கிறார் பிரியா ஆனந்த். அவரது உடல்மொழியும் பேச்சும் ஐஸ்கிரீம் இனிப்பு. கோபம் வரும்போது பல்லைக் கடித்தபடி கத்துவது, வீட்டு அட்வான்சுக்காக, நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுப்பது, உள்ளுக்குள் காதல் வந்ததும் வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது என அத்தனை உணர்ச்சியையும் கண்களிலேயே காட்டி விடுகிறார், பிரியா. 

டுபாக்கூர், வீட்டு புரோக்கராக சந்தானம். ‘சுவத்துல கிறுக்கக் கூடாது. ஃபேன்ல தூக்குப்போட்டுக்கக் கூடாது, கெரசின் ஊத்தி கொளுத்திக்கக் கூடாது’ என வாடகை வீட்டுக்கு அவர் போடும் கண்டிஷனே அலப்பறை. ஒரே வீட்டை இரண்டு பேருக்கு கொடுத்து மாட்டிவிட்டு எஸ்கேப் ஆவது, பிறகு சிவாவின் காதலுக்கு ரூட் போட்டுக்கொடுப்பது, பிரியாவுக்கு நிச்சயிக்கப்பட்ட ராகுலிடம் காதல் கதையை சொல்லுவது என காமெடியனாக மட்டுமல்லாமல் கதையோடும் ஒன்றியிருக்கிறார் சந்தானம். ‘உன் பொண்டாட்டி முன்னால அர்னால்டு நின்னாலே அனிருத் மாதிரிதான் தெரியும்’ என்பது போன்ற அவரது  கலாய்ப்பு, இதிலும் சிறப்பு.

ராகுல் ரவீந்திரன், நிழல்கள் ரவி, சங்கீதா ஆகியோர் அவரவர் வேலையை செய்திருக்கிறார்கள். கீழே விழப்போகும் ஊர்வசியை நாசர் தாங்கிப் பிடிக்கையில் பின்னணியில் வரும், ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல் அப்படியொரு சுகம். அனிருத்தின் இசையில் பாடல்கள் ஹிட் என்றாலும் ஏகப்பட்ட இரைச்சல். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு பளிச். ‘எந்த கேமராவா இருந்தாலும் காதல் உணர்வை படமெடுக்க முடியாது’ என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால், தெரிந்த கதை, எதிர்ப்பார்க்கும் கிளைமாக்ஸ், நாடகத்தனமான காட்சிகளால் சில இடங்களில் தடுமாறினாலும், வரவேற்கிறது இந்த சென்னை.

No comments :

Post a Comment