ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
நள்ளிரவில் நடுரோட்டில் குண்டு காயத்துடன் உயிருக்குப் போராடும் மிஷ்கினை (ஓநாய்), மருத்துவக் கல்லூரி மாணவர் ஸ்ரீ (ஆட்டுக்குட்டி) காப்பாற்ற முயற்சிக்கிறார். போலீஸ் கேஸ் என்பதால் மருத்துவமனைகள் கைவிரிக்க, தன் வீட்டுக்கு கொண்டு சென்று, அவரே ஆபரேஷன் செய்து காப்பாற்றுகிறார்.
விடிந்ததும் பார்த்தால், மிஷ்கின் எஸ்கேப். பிறகுதான் தெரிகிறது, அவர் காப்பாற்றியது, 14 கொலைகள் செய்த ஒரு கொலைகாரனை என்று. குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றத்துக்காக ஸ்ரீ கைது செய்யப்படுகிறார்.
தப்பி ஓடிய மிஷ்கின், ஸ்ரீக்கு நன்றி சொல்ல விரும்புகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் போலீசார், ஸ்ரீயின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து, மிஷ்கினை கொல்லச் சொல்கின்றனர். ஓநாயைக் கொல்ல முயன்ற ஆட்டுக்குட்டி என்ன ஆனது? உண்மையில் ஓநாய் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது கிளைமாக்ஸ்.
இறுகிய முகம், குறைந்த பேச்சு, டைமிங்காக செயல்படும் திறன் என, மிஷ்கின் மிரட்டுகிறார். பார்வை மற்றும் சைகைகளால் உணர்ச்சிகளை அற்புதமாக கடத்துகிறார்.
தனது வேட்டையில், பார்வையற்ற ஒரு இளைஞனை தவறுதலாக கொன்றதையும், அதற்குப் பிராயச்சித்தமாக அவரது பார்வையற்ற தாய், தந்தை மற்றும் தங்கைக்காக வாழ்க்கையை ஒப்படைத்ததையும் பிளாஷ்பேக் காட்சியாக காட்டாமல், 5 நிமிடங்கள் கண் இமை மூடாமல், ஒரே ஷாட்டில் மிஷ்கின் சொல்லும் கதை, கலங்க வைக்கிறது.
‘வழக்கு எண் 18/9’ ஸ்ரீ, உயிருக்குப் போராடும் ஒருவரைக் காப்பாற்ற யோசிக்கும் மருத்துவமனைகளின் முன் தவிப்பது, பிறகு பதற்றத்துடன் ஆபரேஷன் செய்வது, போலீசிடம் சிக்கிக்கொண்டு மிரள்வது, மிஷ்கினின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து மனம் மாறுவது என, தேர்ந்த நடிப்பு.
ஒரு குற்றவாளியை தப்பிக்கவிட்ட அவமானம், அவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற துடிப்பு, அதற்காக மேலதிகாரியிடமே கண்டிப்பு காட்டுவது என, நேர்மையான சி.பி.சி.ஐ.டி அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார் ஷாஜி. ‘எட்வர்ட்... வந்துட்டியா?’
என்று கேட்கும் பார்வையற்ற தாய் மோனா, ‘எட்வர்ட் அண்ணா... கதை சொல்றீங்களா?’ என்று கேட்கும் பார்வையற்ற சிறுமி சைதன்யா, நெகிழ வைக்கின்றனர்.
படத்தின் நிஜ ஹீரோ இளையராஜாதான். பின்னணி இசையில், எப்போதும் நான் ராஜா என்று அடித்துச் சொல்கிறார். ஜூனியர் ரங்காவின் ஒளிப்பதிவு, காட்சியின் கனத்தை அதிகப்படுத்துகிறது. இரவில் படமாக்கப்பட்ட காட்சிகளில் லைட்டிங்குகள் பிரமாதம்.
வயிற்றைக் கிழித்து அரைகுறையாக ஆபரேஷன் செய்யப்பட்ட ஒருவர், அன்று காலையிலேயே தெளிவாக எழுந்து ஓட முடியுமா? போலீஸ் உட்பட எதிரில் வருபவர்களை எல்லாம் வில்லன் ராஜ்பரத்தின் ஆட்கள் சுட்டுக்கொண்டே இருப்பதை விசாரிக்காமல்,
மிஷ்கினைப் பிடிக்க மட்டும் போலீஸ் ஓடிக்கொண்டிருப்பது ஏன்? மிஷ்கினைக் காப்பாற்ற ஆம்புலன்சுக்கு போன் செய்யாமல், ஸ்ரீ அவரை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடுவது ஏன்? இந்த கேள்விகளுக்கான பதிலும் இருந்திருந்தால், மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.ஹீரோயின், குத்தாட்டம், பார் சீன் போன்ற கமர்சியல் அம்சங்கள் இல்லாமல், ஒரு அற்புதமான கிரைம் த்ரில்லரை கொடுத்திருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment