தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்படும் ஹிருத்திக்
'கிரிஷ் - 3' திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவினை கண்டு மகிழ்ந்து போயுள்ள ஹிருத்திக் ரோஷன், தன்னுடைய அடுத்த திரைப்படம் தமிழ்த் திரைப்படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
பொலிவூட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவந்துள்ள திரைப்படம் 'கிரிஷ் 3'. இத்திரைப்படம் வெளியாகி அனைத்து பிரதேசங்களிலும் நல்ல வசூலை குவித்து கொண்டிருக்கிறது.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.
ஹ்ருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கிய இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.203 கோடி வசூல் செய்து இருக்கிறது. 'கிரிஷ் 3' திரைப்படம் சென்னை உள்பட பல இடங்களில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் ரசிகர்களை சந்திப்பதற்காக ஹிருத்திக் ரோஷனும், அவருடைய தந்தை ராகேஷ் ரோஷனும் சென்னை வந்தனர். இருவரும் சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்கள். ஹிருத்திக் ரோஷனை நேரில் பார்ப்பதற்காக ரசிகர், ரசிகைகள் கூட்டம் அலைமோதியது.
ரசிகர்கள் மத்தியில் பேசிய ஹிருத்திக் ரோஷன், 'உங்கள் அன்பை நேரில் பார்த்து நெகிழ்ந்து போனேன். நீங்கள் என் மீது காட்டிய பாசத்தில் எனக்கு மூச்சு திணறி விட்டது. மனசெல்லாம் நிறைந்து இருக்கிறது. பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. இதுபோன்ற அன்பை உலகில் நான் எங்கும் பார்த்ததில்லை' என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிருத்திக் கூறியதாவது,
'நான் இந்தியாவில் எல்லா ஊர்களுக்கும் சென்றுள்ளேன். ஏராளமான ரசிகர்களை சந்தித்து உள்ளேன். ஆனால் சென்னையில் உள்ள ரசிகர்களை போன்று நான் எங்கும் பார்த்ததில்லை.
நான் நடிக்கும் அடுத்த திரைப்படம் தமிழ் திரைப்படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான வாய்ப்பு வந்தால் நிச்சயம் தமிழ் திரைப்படத்தில் நடிப்பேன்.
ரசிகர்கள் எந்த மாதிரி திரைப்படங்களை எதிர்பார்க்கிறார்களோ அந்த மாதிரி படங்களை நான் கொடுப்பேன். எனது 'கிரிஷ் 3' திரைப்படம் அனைத்து பிரதேசங்களிலும் நல்ல வசூலை பெற்றுள்ளதாக செய்தி அறிந்தேன், மிகவும் சந்தோஷமாக உள்ளது.
என்னுடைய வளர்ச்சிக்கு என் அப்பா, மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும், குறிப்பாக ரசிகர்களும் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
என்னை சூப்பர் ஹீரோ என்கிறார்கள். நான் மட்டுமல்ல என் அம்மா, மனைவி, சகோதரி ஆகிய மூன்று பேரும் சூப்பர் ஹீரோயின்கள்தான்.
என் அடுத்த திரைப்படத்தில் நிச்சயமாக தமிழ் நடிகர்களை நடிக்க வைப்பேன். தமிழ் வசனங்களை என் திரைப்படங்களில் பயன்படுத்துவேன்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment