பிரியாணி - திரைவிமர்சனம்
டிராக்டர் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் கார்த்தி, பிரேம்ஜி. ஆரணியில் அதன் கிளை திறப்பு விழாவுக்கு செல்லும் இருவரும் விழா முடிந்ததும், குடித்துக் கொண்டே திரும்புகிறார்கள். வழியில் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஒரு கடையில் நிறுத்துகிறார்கள் காரை. அதே கடைக்கு விலை உயர்ந்த காரில் வரும் மாண்டி தாக்கர், அவர்களை தனக்கு கம்பெனி கொடுக்க கேட்கிறாள். ஜொள்ளு பார்ட்டிகளான இருவரும் அவள் பின்னால் சென்று ஆடிப்பாடி குடித்து தீர்க்கிறார்கள். விடிந்து பார்த்தால், கூத்தடித்த அறையில் துப்பாக்கி, ரத்தக் கறை. போதையில் என்ன நடந்தது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. போலீஸ் வரவும் ஓடுகிறார்கள்.
அவர்களின் கார் டிக்கியில் தொழில் அதிபர் நாசரின் பிணம். பிரியாணிக்கு ஆசைப்பட்டு கொலை பழியில் சிக்கும் இவர்கள், எப்படி அதிலிருந்து மீள்கிறார்கள். இந்த சதிவலைகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் திரில்லர் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள்.பெண்களை கண்டவுடன் கரெக்ட் பண்ணும் கேரக்டரை ஹீரோ இமேஜ் பாதிக்காமல் நாசுக்காகச் செய்கிறார் கார்த்தி. பெண்கள் விஷயத்தில் பிரேம்ஜியை உசுப்பேற்றியே ரணகளமாக்குற கார்த்தியின் அலப்பறைகளும், பிரேம்ஜியின் புலம்பல்களும் ‘ஏ’ கிளாஸ் காமெடி.
கார்த்தியின் அந்த சிரிப்பும், தலைசாய்த்த நடையுமான டிரேட் மார்க் மேனரிசம் அவ்வப்போது எட்டிப்பார்த்து விடுகிறது.படம் முழுக்க நிறைந்திருக்கிறார் பிரேம்ஜி. படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான். குளோஸ்&அப்பில் பேசி பேசி வெறுப்பேற்றுகிறார். கார்த்திக்குக்கு பிரச்னை வரும்போது களத்தில் குதிக்கையில் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். ஹன்சிகா வழக்கம்போல அழகு பொம்மை. பிற்பகுதியில் கதை ஆக்ஷனுக்குள் சென்று விடுவதால் அவ்வப்போது சில காட்சிகளில் வந்து போகிறார்.ஒரு காதல். அதனால் இரண்டு பெரிய சக்திகளுக்கு இடையேயான மோதல்.
அதற்குள் அப்பாவிகளான கார்த்தியையும், பிரேம்ஜியையும் மாட்ட வைத்தல், பூனையாக இருந்தவர்கள் புலியாக மாறி எதிரிகளை பந்தாடுதல் என்ற பரபர திரைக்கதையில் யூகிக்க முடியாத கிளைமாக்சால் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் இயக்குனர். நாசர் மாதிரி மாஸ்க் போட்டு பிரேம்ஜி நடிப்பதெல்லாம் ஓல்டு ஐடியாவாக இருந்தாலும் நாசரின் நடிப்பால் சுவாரஸ்யமாகிறது. அந்த கடைசி நேர ட்விட்ஸ் கணிக்க முடியாதது. ஆனால், ‘அட இதுக்காகவா இவ்ளோ சுத்தி வளைச்சு கதை சொன்னாங்க என்று கேட்கத் தோன்றுகிறது.
போலீசை குடைந்தெடுக்கும் அந்த சிசிடி கேமரா காட்சி, சும்மா போதையில் பண்ணிய அலப்பறை என்று அவிழ்ப்பது ஏமாற்றம். அதைப் பதிவு செய்த கேமரா, கொலையாளியை பதிவு செய்யாமல் போனது ஏன்? திடீரென்று வரும் உமா ரியாஸ்கான் கேரக்டர், ஒட்டவே இல்லை. பிரச்னைகளுக்கு காரணமான மாண்டி தாக்கர், பாலியல் தொழிலாளியா? நாசரின் ஆசை நாயகியா? என்பதில் குழப்பம். யுவனின் 100&வது படம் என்கிறார்கள். அதற்கான எந்த மெனக்கெடலும் தெரியவில்லை. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, பிரியாணிக்கு கலர் கொடுத்திருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment