நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் மது?

No comments
நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் பீர், ரம் போன்ற மதுபானங்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மும்பையில் கடந்த 93ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2007ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய்தத் அப்பீல் செய்தார். இதனை சுப்ரீம் கோர்ட் விசாரித்து 6 ஆண்டு சிறை தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உத்தரவிட்டது. கடந்த மே மாதம் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது புனே சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டார். பரோல் விடுதலைக்கு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

 இதற்கிடையில் உடல் நலம் இல்லாத மனைவியை கவனித்துக் கொள்வதற்காக அவருக்கு மீண்டும் 30 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. நாளை அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சிறையில் அவருக்கு பீர், ரம் போன்ற மது பானங்கள் வழங்கப்படுவதாக பாஜ தலைவர் வினோ தாடே மகாராஷ்டிர மேலவையில் குற்றம் சாட்டினார். 

இதற்கு மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது, சஞ்சய் தத்துக்கு மது பானங்கள் சப்ளை செய்தது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார். இதற்கிடையில் இந்த குற்றசாட்டை புனே எரவாடா சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். எந்த விசாரணைக்கும் தயார் என தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment