லீடர் படத்தில் ரஜினி நடித்தால் அதைவிட மகிழ்ச்சிவேறில்லை! - சேகர் கம்முலா

No comments
சென்னை: தெலுங்கில் தான் இயக்கிய லீடர் படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை என்றார் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா. லீடர் படம் தெலுங்கில் பெரும் வெற்றியை ஈட்டிய படம். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்தால், அரசியல் சூழலே மாறும் என்று ஏற்கெனவே ஒரு விழாவில் சேகர் கம்முலா கூறியிருந்தார். அரசாங்கத்தையே மாற்றும் சக்தி மிக்கவர் ரஜினி ஒருவர்தான் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 லீடர் படத்தில் ரஜினி நடித்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை! - சேகர் கம்முலா இந்த நிலையில் நீ எங்கே என் அன்பே படத்தின் செய்தியாளர் சந்திப்புக்காக நேற்று சென்னை வந்த சேகர் கம்முலாவிடம், ரஜினியை வைத்து லீடர் படத்தை ரீமேக் செய்வது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சேகர் கம்முலா, "இன்றைய இயக்குநர்கள் அத்தனைப் பேருக்குமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவரை இயக்க விரும்பாதவர் யாராவது இருக்க முடியுமா... அத்தனை சிறந்த கலைஞர், மனிதர் அவர். எனது லீடர் படத்தின் கதை அவரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான். அந்தப் படத்தை ரஜினி பார்க்க வேண்டும் என்று விரும்பி ஏவிஎம் சரவணனிடம் சொல்லி அனுப்பினேன் (லீடர் ஏவிஎம் தயாரிப்புதான்). ரஜினியும் படம் பார்த்தார். ஆனால் அவர் கருத்து என்ன என்று எனக்குத் தெரியவில்லை. லீடர் பட ரீமேக்கில் ரஜினி நடித்தால் மிகப் பெரிய வெற்றி மட்டுமல்ல, அரசியல் சூழலே மாறிவிடும். இப்போதும் அவரை இயக்கும் பெரும் கனவு எனக்குள் இருக்கிறது. ஆனால் அவரை அணுக முடியவில்லை. உங்கள் மூலம் என் விருப்பம் அவருக்குத் தெரிய வரும் என நம்புகிறேன்," என்றார். சேகர் கம்முலா வெறும் பரபரப்புக்காகப் பேசுபவரில்லை. தெலுங்கு சினிமாவில் ராஜமவுலி மாதிரி மவுசு மிக்கவர். மிகச் சிறந்த படைப்பாளி. ரஜினியின் மிகத் தீவிர ரசிகரும்கூட. அவரைப் போன்ற ரசிகர்கள்தான் ரஜினியை உணர்ந்து அவருக்கேற்ற திரைக்கதையைப் படைப்பார்கள். சூப்பர் ஸ்டாரிடமிருந்து விரைவில் சேகர் கம்முலாவுக்கு அழைப்பு வரும் என நம்புவோமாக!

No comments :

Post a Comment