வருகிறது காரமான ஆந்திரா மெஸ்.
பாலிவுட்டில் பல விளம்பர படங்களை தயாரித்த ஷோ போட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் படம் ‘ஆந்திரா மெஸ்’ . கலை ஓவியர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் முதன் முறையாக நடித்திருக்கிறார். ஜெய் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர், பல்வேறு விளம்பர நிறுவனங்களில் பணியாற்றிய விளம்பரப் பட இயக்குனர். பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத்திடம் உதவியாளராக இருந்த முகேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
“சைத்தான், டேவிட்” ஆகிய ஹிந்திப் படங்களுக்கும், ‘ஆமென்’ மலையாளத் திரைப்படம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஜெய் கூறியதாவது,
“இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவைக் கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவுக்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன்.
இது முழுக்க முழுக்க எப்படி ஒரு கதையைச் சொல்லி கேட்பவர்களுக்கு சுவைபட சொல்வார்களோ அப்படிப்பட்ட ஒரு முயற்சி. இந்த படத்தில் வரும் இடங்கள் புதிதானவை, உடைகள் புதிதானவை, சம்பவங்கள, கதாபாத்திரங்கள் புதிதானவர்கள். ஆனால், இவர்களின் வாழ்வு நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.
இந்த மாறுபட்ட முயற்சி படத்தின் உருவாக்கத்திலும் பிரதிபலிக்கும்.
‘ஸ்நூக்கர்’ விளையாட்டு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த விளையாட்டில் எப்படி மேஜையில் உள்ள ஒரு பந்தினை குறி வைத்து தள்ளும் போது, அது வேறொரு பந்தை மோதி, அது சம்பந்தமே இல்லாத மற்றொரு பந்தை இடித்து, அதன் மூலம் வேறு ஒரு பந்து பள்ளத்தில் சென்று விழுகிறதோ அதைப் போலவே, ‘ஆந்திரா மெஸ்’ கதை சொல்லும் முறையும் இருக்கும் என்றார்.
பல விளம்பரப் படங்களைத் தயாரித்து வரும் ஷோ போட் ஸ்டுடியோஸ் நிறுவனம் முதன் முறையாக திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.
திரைப்படத்துறை சக்தி வாய்ந்த ஊடகத்துறை என்பதால் தொடர்ந்து நல்ல கதைகளையும், சமூகத்தை பிரதிபலிக்கக் கூடிய படங்களையும் எடுக்க முடிவு செய்துள்ளது. அதோடு, வினியோகத் துறையிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் திரைப்படங்களைக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment