வராத மூன்று நாட்களுக்கு யார்தான் சம்பளம் கொடுப்பார்கள்? பவர்ஸ்டார் புகார் குறித்து விஜய் மில்டன்

No comments
சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் கோலி சோடா. பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தயாரித்து இயக்கிய இந்தப்படத்தில் கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் படத்தில் பவர் ஸ்டார் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போவார். முதலில் இந்தப் பாடலுக்காக பவர் ஸ்டாரிட்ம் 6 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். ஆனால், பின்பு 3 நாட்களிலேயே முழு பாடலையும் எடுத்து முடித்துவிட்டு அவரை அனுப்பிவிட்டார்கள். 
 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பவர் ஸ்டார் கோலிசோடா தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார். அதில், கோலி சோடா படத்தில் நடித்ததற்காக தனக்கு பேசிய முழு சம்பளத்தையும் வழங்கவில்லை. இன்னும் சம்பள பாக்கி இருப்பதாகவும் பணத்தை கேட்டால் மறுக்கிறார்கள் என்றும் அப்போது தெரிவித்திருந்தார். இது குறித்து கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் கூறுகையில், ‘கோலி சோடா படத்தில் நடிப்பதற்காக பவர் ஸ்டார் ஆறு நாட்கள் கால்ஷீட் கொடுத்தது என்னமோ உண்மைதான்.
 ஆனால் படப்பிடிப்பை மூன்று நாட்களில் முடிந்துவிட்டோம். அவர் நடித்த காட்சிகளுக்கு கூட டப்பிங் பேச வரவில்லை. வேறாருவரை வைத்துதான் டப்பிங் பேசினோம். இருப்பினும், அவர் நடித்த மூன்று நாட்களுக்கான சம்பள தொகை முழுவதையும் செட்டில் செய்துவிட்டோம்.
 அப்படியிருக்கையில் வராத மூன்று நாட்களுக்கும் சேர்த்து சம்பளம் கேட்டால் யார்தான் கொடுப்பார்கள்?’ என்று பதிலளித்திருக்கிறார் விஜய் மில்டன். பல மோசடி வழக்குகளில் சிக்கிய பவர் ஸ்டார் சிறைக்குச் சென்று சமீபத்தில்தான் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment