பாலா படத்திற்காக கரகாட்டம் கற்கிறார் வரலட்சுமி

No comments
பரதேசிக்கு பிறகு பாலா அடுத்து இயக்கும் படம் கரகாட்டம் சம்பந்தப்பட்டது. படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சசிகுமார் ஹீரோ, இளையராஜா இசை, செழியன் ஒளிப்பதிவு. படத்திற்காக 12 பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. மார்ச் மாதம் முதல் தஞ்சை பகுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தின் ஹீரோயினாக பலரது பெயர் பரிசீலிக்கப்பட்டு கடைசியாக ஸ்ரேயாவும், வரலட்சுமியும் தனித்தனியாக அழைக்கப்பட்டு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. 
ஸ்ரேயாதான் தேர்வு செய்யப்படுவார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தபோது பாலா வரலட்சுமியை கரகாட்டகாரி என்று அடையாளம் காட்டிவிட்டார். "கரகாட்டம் ஆடும் பெண்களுக்கு கொஞ்சம் ஆண்மைத் தன்மையும், ஆண்களுக்கு கொஞ்சம் பெண்மைத் தன்மையும் இருக்கும் என்பார்கள். அந்த வகையில் சசிகுமாரின் தாடியை கிராபிக்சில் நீக்கிவிட்டு பார்த்தபோது பொருத்தமாக இருந்தார். 
அதேப்போல் வரலட்சுமியும் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தியுள்ளதால் அவரும் தேர்வானார்" என்று பாலா வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இதுபற்றி வரலட்சுமி கூறியிருப்பதாவது: என்னை போட்டோ டெஸ்ட் ஷூட்டுக்கு வரச் சொல்லியிருந்தாங்க போயிருந்தேன். 
டெஸ்ட் முடிந்து வெளியில வந்ததுமே, "நீதான் கரகாட்டக்காரி"ன்னு பாலா சார் சொன்னார். மற்றபடி ஸ்ரேயாவும் டெஸ்டுக்கு வந்தார்ங்றதும், அவர் ரிஜக்ட் ஆனார் என்பதும் எனக்குத் தெரியாது.
 பாலா சார் படத்துல நடிக்கிறது என்னோட கனவா இருந்திச்சு. அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும்னு நினைக்கல. அவருடைய படத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவேன். கிளாசிக்கல், ஹிப்ஹாப், சல்சான்னு விதவித டான்ஸ் கத்துக்கிட்ட நான் இப்போ பாலா சார் படத்துக்காக கரகாட்டம் கற்றுக் கொள்ளப் போகிறேன் என்கிறார் வரலட்சுமி.

No comments :

Post a Comment