சினிமாவில் ஹீரோவான சின்னத்திரை வில்லன் அஜய்!

No comments
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான சிவகார்த்திகேயன், சினிமாவில் வெற்றி கொடி நாட்டியிருப்பதால் சின்னத்திரையில் புகழ் பெற்ற மேலும் சில நடிகர்களுக்கும் சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதில் கோலங்கள் தொடரில் நடித்த அஜய் குறிப்பிடத்தக்கவர். தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் ஆதி என்ற மிரட்டலான வேடத்தில் நடித்தவர்தான் இந்த அஜய். அவரது எனர்ஜிடிக்கான நடிப்பு காரணமாகவே அந்த தொடர் விறுவிறுப்பாக சென்றது.

அதையடுத்தும் பல தொடர்களில் நடித்து வந்த அஜய், தற்போது ஆதியும் அந்தமும் என்ற த்ரில்லர் படம் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளிததிரைக்கு வந்துள்ளார். இந்த பிரவேசம் குறித்து அஜய் கூறுகையில், நான் சின்னத்திரையில் நடித்து வந்தபோதும், சினிமாவிலும் முன்னணி நடிகராக வேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. அதற்கு தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் என்னைப்போன்ற இன்னொரு டி.வி நடிகரான கெளசிக் பனிவிழும் மலர்வனம் என்றொரு படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அதனால் நான் நடிக்கும் படத்தையும் அவரையே இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, என்னிடமிருந்த ஒரு திரில்லர் கதையை சொல்லி, அவரை இயக்க வைத்தேன். படத்தை சில நண்பர்களின் உதவியோடு நானே தயாரிக்க முடிவு செய்தேன்.
 மேலும் இதற்கு முன்பு எத்தனையோ த்ரில்லர் படங்கள் வந்திருந்தாலும் இது புது மாதிரியாக இருக்கும். மேலும் நான் எந்தவொரு முயற்சியிலும் இறங்குவதற்கு முன்பே நிறைய யோசிப்பேன். ஆனால் இறங்கியபிறகு யோசிக்க மாட்டேன். அப்படித்தான் இந்த படத்திலும் செயல்பட்டேன். நான் தீர யோசித்த எடுத்த முடிவு இப்போது ஒரே வருடத்தில் படத்தை முடித்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டோம் என்று சொல்லும் அஜய்யிடம், எந்த மாதிரியான ஹீரோவாக நடித்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், அது மட்டும் சஸ்பென்ஸ். இதில் நான் ஹீரோவா இல்லை வில்லனா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொளளுங்கள். இப்போதே நான் சொல்லிவிட்டால் எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்று சொல்லி எஸ்கேப்பாகி விட்டார்.

No comments :

Post a Comment