கேன்சரால் தொடர்ந்து வேதனை: சினிமாவில் இருந்து விலகுகிறார் மம்தா
பஹ்ரைனில் பிறந்த மம்தா மோகன்தாசுக்கு கேரளா பூர்வீகம். 2005ம் ஆண்டு மயோஹம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தார். குசேலன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். சிறந்த பின்னணி பாடகியான மம்தா சிறந்த பின்னணி பாடகிக்காக ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றார். சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதும் பெற்றார்.
சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்தா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகி புற்றுநோயுடன் போராடி ஜெயித்தார்.
தனது அடர்த்தியான கூந்தலை இழந்தபோதும் மீண்டும் தைரியமாக சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையானர். 2011ம் ஆண்டு தனது பள்ளிக் கால தோழனும், குடும்ப நண்பரும், தொழிலதிபருமான பிரஜித் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்குள் என்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டதோ ஒரு வருடத்துக்குள் பிரிந்த வாழ்ந்து, விவாகரத்தும் செய்து கொண்டனர்.
விவாகரத்துக்கு பிறகு மனதளவிலும் சோர்ந்துவிட்ட மம்தா படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் புற்றுநோய் தாக்குதல் ஏற்பட்டது. அதை மறைத்தும், மறுத்தும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு மட்டும் 5 படங்களில் நடித்தார். இந்த ஆண்டு 4 படங்களில் நடித்து வருகிறார். அவைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இப்போது நோய் தாக்குதல் தீவிரமாகிவிட்டால். தினமும் வேதனையில் துடிக்கிறார்.
இதை பார்த்த அவரது பெற்றோர் நடித்தது போதும் என்று அவரிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: இரண்டு முறை ஏற்பட்ட புற்று நோய் பாதிப்பால் நான் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டேன். ஒரு மாதம் தீவிர சிகிச்சை, தாயின் மடியில் ஒரு வருடம் ஓய்வு என என் காலம் கழிந்தது. எனது மனஆறுதலுக்காகவும், நோயின் கொடுமையிலிருந்து விடுபடுவதற்காகவும் சரியாக குணமாகாத நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன்.
இப்போது என் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. படப்பிடிப்பில் என்னால் உற்சாகமாக செயல்பட முடியவில்லை. இதனால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறேன். என்றாலும் பின்னணி பாடகியாக எனது பணிகளை தொடர்ந்து செய்வேன்.
பாடுவது எனது மனதிற்கும், ஆன்மாவிற்கும் ஆறுதலாக இருக்கும். இவ்வாறு மம்தா கூறியிருக்கிறார். தமிழில் அதிகமாக நடிக்காவிட்டாலும். மம்தா மிகச் சிறந்த நடிகை என்பதில் சந்தேகம் இல்லை.
சொந்த வாழ்க்கையின் சோகங்களிலிருந்தும், புற்றுநோய் அரக்கனின் பிடியிலிருந்தும் விடுபட்டு, மம்தா மீண்டும் பழைய உற்சாகத்தாடு சினிமாவுக்கு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment