தமிழ் இசைக்கலைஞர்கள் இலங்கை செல்வது தடுக்கப்படுவதால் இலங்கை வாழ்தமிழர்களுக்கு சிங்கள கலைஞர்களின் இசையே தஞ்சமாகிறது - ஈழத்தமிழர் க.தா.பிரசாத்!

No comments
ஒரு முன்னணி டி.வி., சேனலின் சார்பாகவும், பிரபல மொபைல் போன் நிறுவனத்தின் சார்பாகவும் சமீபத்தில், தமிழ்நாட்டின் பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் இசைகலைஞர்களை அழைத்து சென்று இலங்கை யாழ்பாணத்தில் தமிழர்களை மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும், அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டதையும் அறிந்திருக்கலாம்! இந்நிகழ்ச்சிக்கு முன்னின்று ஏற்பாடு செய்து, கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால் பல லகரங்கள் நஷ்டத்திற்கு உள்ளான ஈழத்தமிழர் க.தா.பிரசாத் சமீபமாக சென்னை வந்தார். 
அவரை சந்தித்து இதுப்பற்றி அறிந்து கொள்ள முற்பட்டோம். அவர் கூறியதாவது... தமிழ்நாட்டில் இருந்து தமிழ் இசைக்கலைஞர்கள் இலங்கைக்கு செல்வது அரிதாக உள்ளதால் அங்குள்ள தமிழர்களுக்கு, சிங்கள கலைஞர்களால் இசைக்கப்படும் கொச்சை தமிழ் இசை நிகழ்ச்சிகளே தஞ்சமாகி வருகிறது! இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே ஈழத்தமிழனாகிய நான் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து போராடி வருகிறேன்.
 க.தா.பிரசாத் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இலங்கையிலும், உலகநாடுகளிலும் தென்னிந்திய கலைஞர்களுடன், ஈழக்கலைஞர்களையும் இணைத்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். தற்பொழுது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் உணர்வாளர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஈழத்தமிழனாகிய நான், மே மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் இசை, கலை நிகழ்வுகளை கடந்த காலங்களில் நடத்தவில்லை.
 இப்பொழுது இம்மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டின் காரணமாக இம்மாதம் நடைபெறும் சகல கலை நிகழ்ச்சிகளையும் நிறுத்தி உள்ளேன். உலக நாடுகளில் மலேசியா, சிங்கப்பூர், நார்வே, பிரான்ஸ், ஜெர்மன், ஆஸ்திரேலியா, கனடா, லண்டன் போன்ற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு தென்னிந்திய இசையை கேட்கும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கும், இந்திய வம்சாவளி மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் தான் தென்னிந்திய இசையை கேட்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது. 
இதனால் தமிழ்பேசும் மக்கள் பிரதேசங்களில், சிங்கள கலைஞர்களால் இசைக்கப்படும் சிங்கள பாடல்கள் மற்றும் கொச்சையான தமிழ் பாடல்களை கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசியல் கலக்காத தமிழ்பேசும் மக்களுக்கு முழுமையாக சென்றடைகின்ற தமிழ் இசை நிகழ்ச்சிகளை மார்ச், மே, நவம்பர் மாதங்களை தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் ஆதரவுடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அவ்வாறு இல்லாத பட்சத்தில், தமிழ் பிராந்தியங்களிலும் சிங்கள இசை கலைஞர்களின் சிங்கள பாடல்களையும், கொச்சை தமிழ் பாடல்களையுமே கேட்க வேண்டி இருக்கும்., என்பதை எல்லோரும் உணர வேண்டும்! என்கிறார் க.தா.பிரசாத். அவர் கூற்றிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது!

No comments :

Post a Comment