இளையராஜா ரசிகர்மன்ற தலைவராகிறார் பவதாரணி!

No comments
இளையராஜா துவங்க இருக்கும் ரசிகர்மன்றத்திற்கு அவரது வாரிசும், பிரபல பாடகியுமான பவதாரணி தலைவராகிறார். இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இளையராஜா ரசிகர் மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 5ந் தேதி மதுரை தமுக்கம் மைதனாத்தில் நடக்கும் விழாவில் இது முறைப்படி துவக்கி வைக்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ரசிகர் மன்றத்தின் தலைவராக இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 
இந்நிலையில், கார்த்திக் ராஜாவுக்கு நிறைய பணிகள் இருப்பதால் அவரால் அந்த பொறுப்பு வகிக்க முடியாத சூழல் உள்ளது. இளையராஜா, எவ்வளவோ சொல்லியும் கார்த்திக் ராஜா தலைவர் பொறுப்பு வகிக்க மறுத்துவிட்டார். கார்த்திக் பதிலாக யுவனிடமும் பேசி பார்த்துள்ளனர்.
 ஆனால் அவரும் படங்களின் இசையில் பிஸியாக இருப்பதால் மறுத்துவிட்டார். அதனால் இவர்களுக்கு பதில் அவர்களது சகோதரியான பவதாரணி தலைவராக பொறுப்பேற்கிறார். மதுரையில் நடக்கும் இசை நிகழ்ச்சியின் போது இதற்கான அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன. இதுகுறித்து பவதாரணி கூறுகையில், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நற்பணிகளை செய்ய உள்ளோம்.
 முதற்கட்டமாக பண்ணபுரத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்ட இருக்கிறோம். தொடர்ந்து எங்களது ஜீவா அறக்கட்டளை சார்பிலும், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நல்ல காரியங்களை செய்ய இருக்கிறோம். தற்போது வரை சுமார் 1 கோடிக்கும் அதிகமானபேர் அப்பாவின் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment