கோச்சடையான் மனைவிக்கு கொடுக்கும் சத்தியம்: தேன் சொட்டும் ஒரு பாட்டு

No comments
சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோன் நடித்த கோச்சடையானின் பாடல்கள் வருகிற 9ந் தேதி ரிலீசாகிறது. அதற்கு முன்னதாக தினமலர் இணையதள வாசகர்களுக்கு தேன் சொட்டும் ஒரு பாட்டை வரி வடிவில் தருகிறோம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் இது... பாட்டுக்கான சூழ்நிலை... கோச்சடையானுக்கும், அவரது காதலிக்கும் நடக்கும் திருமணத்தின்போது வருகிற பாடல் இது. கோச்சடையான் தன் காதலியின் அழகையும், அவளை மணக்கப்போகிற சந்தோஷத்தையும் வெளிப்படுத்துகிற பாடலாக இதனை உருவாக்க முதலில் முடிவு செய்தார்கள். 
ஆனால் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இது போன்று நிறைய பாடல்கள் வந்து விட்டது. மணக்கப்போகும் காதலிக்கு கோச்சடையான் சில சத்தியங்களை செய்து தருவது போல் பாடல் இருந்தால் புதுமையாக இருக்கும் என்று சொல்ல உருவானது இந்தப் பாடல்... 

 காதல் கனியே உன்னைக் கைவிட மாட்டேன் 

சத்தியம் சத்தியம் இது சத்தியம் 

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே சத்தியம் 

இது சத்தியம் ஒரு குழந்தை போலே... 

ஒரு வைரம் போலே...

 தூய்மையான என் சத்தியம் புனிதமானது 

இப் பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையிலும் தொடேன் 

பிறிதோர் பக்கம் மனம் சாயாப் பிரியம் காப்பேன் 

சத்தியம் சத்தியம் இது சத்தியமே 

 செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன் 

நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன் 

கைப்பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன் 

ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

 சத்தியம் இது சத்தியமே 

 மாதமலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்

 நோய் மடியோடு நீ வீழ்ந்தால் தாய் மடியாவேன்

 பாடலின் பொருள் பொய்யே பேசாத ஒரு குழந்தை போன்று, என்றும் அழியாத வைரம் போன்று காலைக் கதிரவன் மீது உனக்கு சத்தியம் செய்து தருகிறேன்... 

காதல் கனியே உன்னை என்றும் நான் கைவிட மாட்டேன். இந்தப் பிறவியில் உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை மனதாலும் நினைக்க மாட்டேன். இன்னொரு பக்கம் என் மனம் செல்லாத வகையில் உன்னிடம் அன்பாக இருப்பேன். உன் கொலுசு ஒலிக்கும் சத்தத்தின் குறிப்பறிந்து உனக்கு சேவை செய்வேன். 

தினமும் காலையில் எழுந்ததும் உன் நெற்றியில் முத்தம் கொடுத்து அன்றைய தினத்தை துவக்குவேன். நான் கொடுக்கிற பணத்தையெல்லாம் நீ செலவு செய்து விட்டாலும். என்ன செலவு செய்தாய் என்று கணக்கு கேட்க மாட்டேன். நமக்குள் எப்போதாவது கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்தால். வாக்குவாதம் வந்தால் நீ சொல்வதே சரி என்று உன்னிடம் தோற்று நிற்பேன்.

 உனக்கு மாதவிடாய் நின்றாலும், நீ தூங்க என் மார்பை தருவேன். கடைசி காலத்தில் நீ நோயில் விழுந்தால் நானே உன் தாயாகி மடியில் உன்னை வைத்து காப்பேன். இது வெறும் டிரைய்லர்தான் கண்ணா... 9ம் தேதி வரும் பாட்டு சும்மா அதிரும்ல...!!

No comments :

Post a Comment