தமிழ் தெரியாத நடிகைகளுக்கு லட்சம் லட்சமாய் சம்பளம் கொடுப்பதா? -ராதாரவி எதிர்ப்பு

No comments
மொழியே தெரியாமல் உதட்டை அப்படியும் இப்படியும் அசைக்கும் நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் என்பவர் இயக்கிய வஞ்சகம் என்ற குறும் பட வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது. அதில், நடிகர்கள் ராதாரவி, விதார்த், விஷ்ணு, தயாரிப்பாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் ராதாரவி பேசுகையில், பாலிவுட் சினிமாவில் இந்தி தெரியாத நடிகைகளுக்கு அவர்கள் சான்ஸ் கொடுப்பதில்லை. ஆனால், கோலிவுட்டில், தமிழே தெரியாத இந்தி நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். 
அவர்களை விமானத்தில் அழைத்து வந்து ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து லட்சம் லட்சமாய் சம்பளத்தை அள்ளிக்கொடுக்கிறார்கள். தமிழில் ஒரு வார்த்தைகூட பேச தெரியாத அவர்கள், உதட்டை அப்படியும் இப்படியும் அசைத்தபடி நடிக்கிறார்கள். இதனால் நடிப்பில் உயிரோட்டம் இருப்பதில்லை. சினிமாவின் தரம் குறைகிறது. 
அதனால் இதை தமிழ் இயக்குனர்கள் தவிர்க்க வேண்டும். தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுக்கு தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார். மேலும் தமிழ் பேச தெரியாத இந்தி நடிகைகளுக்கு அதிகமான சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments :

Post a Comment