திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க இடைக்கால தடை

No comments
சென்னை ஐகோர்ட்டில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் பொருளாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னை ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கி கிளையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் கணக்கு உள்ளது. இந்த வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் கவுன்சிலின் பொருளாளரின் கையொப்பம் அவசியம் தேவை. ஆனால் தற்போது இந்த கவுன்சிலின் நிர்வாகிகளாக இருப்பவர்கள், பொருளாளரின் கையொப்பம் இல்லாமலேயே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சிக்கின்றனர். 
எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.தமிழ்வாணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-– மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சிலம்பரசன், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் விதி 23(இ)-யின்படி, கவுன்சில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவேண்டும் என்றால் அதற்குரிய காசோலையில் பொருளாளர் கையெழுத்து அவசியமாகும். ஆனால், பொருளாளர் கையெழுத்து இல்லாமல் கவுன்சில் நிர்வாகிகள் பணத்தை எடுக்க முயற்சிக்கின்றனர் என்று வாதம் செய்தார்.
 மனுதாரரின் கோரிக்கைக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது என்று முடிவு செய்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள், கவுன்சிலின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வருகிற 20–ந்தேதி வரை தடை விதிக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments :

Post a Comment