காவியத்தலைவனுக்காக ஹாலிவுட் படத்தை தவிர்த்தேன்! -ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்
வெயில், அங்காடித் தெரு, அரவாண் படங்களைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ''காவியத்தலைவன்''. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை வடபழனியிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், சித்தார்த், வசந்தபாலன், நாசர், வேதிகா, பா.விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சித்தார்த் பேசுகையில், வாங்க மக்கா வாங்க, எங்க நாடகம் பாக்க வாங்க என்று இப்படம் மூலம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு அழைக்க வருகிறோம்.
1940களில் நாடகத்துறையில் கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள் போன்ற கலைஞர்கள் சிறந்து விளங்கிய காலத்து கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படம் பற்றி நானும், வசந்தபாலனும் 2 வருடமாக பேசி வந்தோம். இன்றைய காலகட்டத்துக்கு இது சரியா வருமா? வராதா? என்று தீவிரமாக யோசித்த பிறகே தைரியாக இறங்கினோம.
அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் சாரை இசையமைக்க வைத்தால் இன்னும் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்பதால் அவரிடம் பேசினோம். அவரும் ஒத்துக்கொண்டார். அதையடுத்து, கேரளாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கும் ப்ருதிவிராஜிடமும் இப்படம் பற்றி சொன்னபோது அவரும் உற்சாகமாக வந்தார்.
அப்படித்தான் இந்த காவியத்தலைவன் படம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் சார் என்னை அவ்வப்போது என்கரேஜ் பண்ணுவார். அப்போது புதுமாதிரியான கதைகளை பண்ணுங்கள் என்பார். அந்த வகையில் அவர் சொன்னது போலவே இந்த படம் புதுமாதிரியான கதையாக எனக்கு அமைந்திருக்கிறது. அந்த படத்துக்கு ரஹ்மான் சாரே இசையமைப்பது எனக்கு இன்னும் பெரிய சந்தோசத்தை கொடுக்கிறது என்றார்.
அவரைத் தொடர்ந்து வசந்தபாலன் பேசுகையில், அரவானுக்கு முன்பே இந்த படத்தைதான் இயக்க நினைத்தேன். அப்போது சரியான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது நான் நினைத்ததை விட முன்னணி கலைஞர்களை வைத்து மெகா படமாக காவியத்தலைவனை இயக்கி வருகிறேன். எப்போதுமே எனது ஒவ்வொரு படமும் நன்றாக வர வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடுவேன்.
அப்படி இந்த படத்திலும் மெனக்கெட நினைத்தேன். ஆனால், படத்தில் நடித்த சித்தார்த், ப்ருதிவிராஜ்,. வேதிகா, நாசர், சந்தானம், தம்பி ராமைய்யா என அனைவருமே அற்புதமான நடிகர்கள். அதனால், டயலாக் பேப்பரை வாங்கிக்கொண்டு அவர்களாகவே ரிகர்சல் பார்த்து அருமையாக நடித்துக்கொடுத்தார்கள்.
அதனால் இந்த படத்தில் என் உழைப்பு கம்மிதான்.
மேலும், இப்படத்துக்காக ரஹ்மான் சாரை இசையமைக்க கேட்க சென்றபோது, ஒருவித பயம் இருந்தது. காரணம், நம்மிடம் ஆலோசனை கேட்காமல் அவராக ஏதாவது டியூனை ரெடி பண்ணி கொடுத்து விடுவாரோ என்று நினைத்தேன். ஆனால், அவர் அப்படியல்ல. ஒவ்வொரு விசயத்தையும் என் விருப்பப்படியே செய்து கொடுத்தார். அந்த வகையில், இந்த படத்தில் இதுவரையில்லாத வகையில் மிகப்புதுமையான இசையை கொடுத்துள்ள ரஹ்மான் சார், இந்த படத்துக்காக 20 பாடல்களை கொடுத்துள்ளார்.
அதோடு, இன்னொரு ஹீரோவாக ப்ருதிவிராஜ் நடிப்பதால், கதை விசயத்தில் சித்தார்த் பிரச்னை செய்வாரோ என்றும் பயந்தேன. ஆனால், அவரோ பல இடங்களில் ப்ருதிவிராஜ்க்காக விட்டுக்கொடுத்தார். இன்னும் சொல்லப்போனால், ஒரு காட்சியில் நடித்தபோது, ப்ருதிவிராஜின் முகத்தில் மேக்கப் சற்று கலைந்திருப்பதைப்பார்த்த சித்தார்த், அவருக்கு டச்அப் செய்து விட்டார். அந்த அளவுக்கு சக நடிகருடன் தோழமையுடனும், படம் நன்றாக வர வேணடுமென்று ஒத்துழைப்பு கொடுத்தார் என்றார்.
கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், இந்த படத்தின் கதையை வசந்தபாலன் சொன்னபோது, 1940களின் நாடகத்துறை சிறந்து விளங்கிய காலகட்டத்தை என் மனக்கண்ணில் கொண்டு வந்துவிட்டார். அதனால் இந்த படத்தின் மீது எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதன்காரணமாக, ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைப்பதைகூட தவிர்த்துவிட்டு, காவியத்தலைவனுக்காக முழுவீச்சில் இறங்கினேன். அந்த வகையில், கிட்டப்பா காலத்து பாடல்களான கூத்து, நாட்டுப்புற இசை பாணியில் மொத்தம் 20 பாடல்களை உருவாக்கினேன். இதில் சில சின்ன சின்ன பிட் பாடல்களாகவும் இருக்கும். குறிப்பாக, இந்த காலகட்டத்து ரசிகர்களும் கிட்டப்பா காலத்து பாடல்களை ரசிக்கும் வகையில் புதுப்பித்து கொடுத்துள்ளேன். இது எனது ஆல்பங்களில் ரொம்ப புதுசாக இருக்கும் என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment