மதுரையில் இளையராஜாவின் சங்கீத திருநாள்!!

No comments
சமீபத்தில் மலேசியாவில் கார்த்திக் ராஜா நடத்திய இசைக்கச்சேரியில் இசைஞானி இளையராஜா பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் மலேசிய ரசிகர்களை மகிழ்விக்க வீடியோ கான்பரன்சிங் மூலம் சில பாடல்களை பாடியும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்நிலையில் கார்த்திக் ராஜா அடுத்தப்படியாக மதுரையில் ஒரு பிரமாண்ட இசைக்கச்சேரி நடத்துகிறார். மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் 5ம் தேதி நடக்கும் இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவும் பங்கேற்க உள்ளார்.
 இதுதொடர்பான பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் ராஜா, அப்பா உடல்நலம் சரியில்லாமல் போனபோது ஏகப்பட்ட போன் அழைப்புகள் வந்தது. 
குறிப்பாக முதல்போனே எங்களது சொந்த ஊரான பண்ணப்புரத்தில் இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து ஏகப்பட்ட போன் அழைப்புகள். அப்பா மீது அவர்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அன்று என்னால் உணர முடிந்தது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியபோது இசைகச்சேரி நடத்தலாம் என்று அப்பாவிடம் சொன்னேன். 
கச்சேரியை பண்ணபுரத்திலேயே வைக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் அங்கு அவ்வளவு பேர் வந்து செல்ல சிரமமாக இருக்கும் என்பதால் மதுரையில் நடத்த சொல்லி அப்பா சொன்னார். அதன்படி மதுரை, தமுக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல் 5ம் தேதி பிரமாண்ட முறையில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ''ராஜாவின் சங்கீத திருநாள்'' என்று பெயர் வைத்துள்ளோம். நிகழ்ச்சியின் முதல்பாடலை அப்பாவே பாடி தொடங்கி வைக்கிறார். 
அதன் பிறகு நிறைய பாடல்களும் பாட உள்ளார். அவரோடு சேர்ந்து நான், பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், மனோ, சித்ரா, சாதனா, ஹரிச்சரண் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளோம். மேலும் இந்த இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை பண்ணபுரத்தில், எங்களது ஜீவா-இளையராஜா அறக்கட்டளை வாயிலாக அங்கு கட்டப்பட்டு வரும் பள்ளிக்கூடத்திற்கு நிதியுதவியாக வழங்க உள்ளோம் என்றார்.

No comments :

Post a Comment