இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்: கமல் பேட்டி

No comments
சென்னை, மார்ச் 31- நடிகர் கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதன்படி, கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை பிரணாப் வழங்கினார். 
இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு இன்றிரவு சென்னை திரும்பிய கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கடந்த ஆண்டு 'விஸ்வரூபம்' படம் தொடர்பான சர்ச்சை எழுந்து, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட போது பேட்டியளித்த கமலஹாசன், 'உலக நாயகன் என்று சொல்வதால், என்னை தமிழகத்தைவிட்டு வெளியேற்றிவிட நினைக்கிறார்கள் என்று கருதுகிறேன். தமிழகம் எனக்கு இல்லாமல் போனால் மதசார்பற்ற மாநிலத்தையோ, நாட்டையோ தேடிச் செல்வேன். 
என்னை எங்கு குடியமர்த்துவது என்பது என் ரசிகர்களுக்கு தெரியும்' என்று குறிப்பிட்டிருந்தார். இன்று பத்மபூஷன் விருது பெற்றபோது, சுற்றிலும் ஜாம்பவான்கள் நிற்க, தனக்கு ஏற்பட்ட உணர்வு குறித்து கருத்து தெரிவித்த கமலஹாசன், 'என்னைச் சுற்றிலும் இருந்த சிறப்புக்குரியவர்களுடன் இணைந்து நானும் ஒருவனாக இந்த விருதைப் பெற்றமைக்காக பெருமிதம் அடைந்தேன். அவர்களின் திறமை மற்றும் சாதனைகளை நினைத்து பூரிப்படைந்தேன்.
 இந்தியனாக இருப்பதில் பெருமைக் கொண்டு, இந்த நாட்டுக்கு நான் ஆற்றவேண்டிய கடமையை எண்ணி, மீண்டும் ஒருமுறை அதற்காக சூளுரைத்தேன். எதிர்காலத்தில், கோபப்பட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுப்பதில்லை என்று உறுதியாக தீர்மானித்தேன்' என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

No comments :

Post a Comment