கதாசிரியர்களின் பெயரை இருட்டடிப்பு செய்த சந்தானம்!
சிரிப்பு நடிகரான சந்தானம் கடந்த வருடம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த தற்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப்படத்தை ஸ்ரீநாத் இயக்கி வருகிறார்.
விஜய் நடித்த நாளைய தீர்ப்பு தொடங்கி இங்க என்ன சொல்லுது வரை பல படங்களில் சிரிப்பு நடிகராக நடித்தவர் இவர். தவிர, மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மனைவி அனீஸ் தயாரித்த முத்திரை என்ற படு தோல்விப் படத்தையும் இயக்கியவர்.
முத்திரை படம் தோல்வியடைந்ததினால் டைரக்ஷனை மறந்திருந்த ஸ்ரீநாத்தை அழைத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தவர் சந்தானம்தான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவுற்றநிலையில், விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.
இந்தநிலையில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. 2010 ஆம் ஆண்டில் சுனில் நடிக்க எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி, சூப்பர்டூப்பர் வெற்றியடைந்த படம் மரியாதை ராமண்ணா. இந்தப் படத்தின் ரீமேக்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம்.
மரியாதை ராமண்ணா படத்தின் கதையை எஸ்.எஸ். ராஜமௌலி உடன் இணைந்து எழுதியவர் அவரது சகோதரரான எஸ்.எஸ்.காஞ்சி. மரியாதை ராமண்ணா படத்தின் டைட்டிலிலும், பட விளம்பரங்களில் கதை என எஸ்.எஸ்.
ராஜமௌலி, எஸ்.எஸ்.காஞ்சி இருவரது பெயர்களும் இடம்பெற்றன. அப்படத்தின் ரீமேக்காக தயாராகிவரும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் விளம்பரங்களிலோ எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ்.காஞ்சி இருவரது பெயர்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயம் எஸ்.எஸ். ராஜமௌலியின் கவனத்துக்குப் போனதும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தைத் தயாரிக்கும் பிவிபி நிறுவனத்திடம் தன் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment