உடல்நலம் பாதித்த குள்ள நடிகரின் பரிதாப வாழ்க்கை: மனைவி துணி விற்று சாப்பாடு போடுகிறார்....

No comments

சினிமாவில் குள்ள நடிகராக வந்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையோ பரிதாபத்துக்கு உரியதாக இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டுதான் குள்ள நடிகர் ராஜா. தற்போது இவருக்கு 50 வயதாகிறது.

சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் இவர் பிறவியிலேயே குள்ளம். அவர்களது குடும்பத்தை உறவினர்கள் ஒதுக்கி வைத்தனர். 24 வயதில் கற்பகம் (43) என்ற பெண்ணை மணந்தார். இவரும் குள்ளம். இவர்களுக்கு ஆனந்த் என்ற மகன் இருக்கிறார். 22 வயதாகும் இவரும் குள்ளமாகவே இருக்கிறார். இதனால் இந்த 3 பேரையும் ஊனமுற்றவராக அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது.

குள்ளமாக இருப்பதால் இவர்களால் கடினமான வேலை செய்ய முடியவில்லை. இதனால் எந்த நிறுவனத்திலும் வேலையில் சேர முடியவில்லை. ஆனால் சினிமா தான் கை கொடுத்தது. சூலம், நிழல் தரும் நெஞ்சங்கள், பேரழகன், படிக்காதவன், கோவா, மதராசபட்டினம், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து சிரிக்க வைத்தார் ராஜா.

ராஜாவின் மனைவி கற்பகம். பேரழகன் படத்தில் சினேகா கேரக்டரில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தார். தொடர்ந்து பல படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்தார். என்றாலும் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இவர்களது மகன் ஆனந்த் பிளஸ்-1 படித்து இருக்கிறார். இவருக்கும் வேலை கிடைக்கவில்லை. தற்போது பாண்டியனுடன் கலாட்டா தாங்கலை படத்தில் நடித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக ஜவுளிக்கடையில் வசிக்கிறார்.

குள்ள நடிகர் ராஜாவுக்கு 50 வயதான நிலையில் கால்களில் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுகிறார். தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும் இவர்கள் வீட்டின் ஒரு பகுதியை கடையாக மாற்றி ஜவுளி வியாபாரம் செய்கிறார்கள். மனைவி கற்பகம்தான் ஜவுளி வியாபாரத்தை கவனித்து கணவருக்கு சோறு போடுகிறார். சிகிச்சை செலவையும் அவர்தான் கவனிக்கிறார். வேலை இல்லாமல் இருந்த மகன் ஆனந்த் தற்போது ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

எனவே எங்கள் நிலையை கருதி தமிழக அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும். குடும்பமே ஊனமுற்ற நிலையில் உள்ளது. எங்கள் மீது இரக்கம் காட்டி உதவி செய்யுமாறு முதல்- அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று ராஜா உருக்கமுடன் கூறினார்.

No comments :

Post a Comment