HAPPY BIRTH DAY KING மைக்கேல் ஜாக்சன்- 'இதுதான்' ThisIsit

No comments

மக்களின் மனதை வென்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஒரே பொது விதி அவர்கள் சாமனியர்களை போலவே இருப்பதுதான். கெச்சலான தேகம், கண்களில் மிதக்கும் நெருப்பு துண்டங்கள், அறுந்த வாலினை போன்ற துள்ளல் இதுதான் மைக்கேல் ஜாக்சன். அவர் பிரவேசம் என்பது எந்த எதிர்ப்பும் இல்லாமல் எதிரிநாட்டின் சிம்மாசனத்தில் அமர்வது போல, பாப் இசையுலகின் கடவுளாக தானே பதவியேற்றுக்கொண்டார். அந்த கடவுள் மைக்கேல் ஜாக்சனின் பிறந்த நாள் இன்று.

மைக்கேல் ஜாக்சனின் வாழ்வு ஓர் இரவிலேயே உச்சம் தொடவில்லை. அவரின் முதல் ஆல்பம் வெளிவந்த பத்து ஆண்டுகள் கழித்து த்ரில்லர் வெளியான பின்புதான் உலகம் திரும்பி பார்த்தது. சாகும் வரை அவராலே முறியடிக்க முடியாத சாதனையை அந்த ஆல்பம் செய்ததுமெட்டு கிராமி அவார்ட் வாங்கிய அந்த ஆல்பத்தின் டைட்டில் பாடலை ஒவ்வொரு ஒரு மணி நேரமும் எம்.டிவி ஒளிபரப்ப வேண்டியிருந்தது. இசையும் வீடியோவும் இணைந்த ஆல்பம் அதன் மூலமே அறிமுகமாகியது. ஒவ்வொரு வாரமும் பத்து லட்சம் காப்பி விற்பனையாகி ’பீட்டில்ஸ்’ ஆல்பத்தை எல்லாம் 'தம்பிகளா ஓரமா போய் விளையாடுங்க' என்றது.

வெற்றிகரமான இசைப்பயணம், வரலாற்றில அதிக விற்பனையான ஆல்பம், மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இசைக்கலைஞர் என மைக்கேல் ஜாக்சன் வாங்கியது மொத்தம் 38 கின்னஸ் விருதுகள் உள்ளிட்ட  172 முதன்மை விருதுகள்.இதில் 34 விருதுகள் அவர் இறந்த பின்னரும் அறிவிக்கப்பட்டன.

பாப் இசை உலகின் அரசரான ஜாக்சன் 34 வயதில் ராக் அன்ட் ரோல் இசையின் அரசரான எல்விஸ் ப்ரெஸ்லியின் மகள் லிசா பிரஸ்லியை மணந்தார். இருவருக்கும் ஸ்ருதி சேராமல் இரண்டே ஆண்டில் பிரிவு ஏற்பட்டது. பின்னர் தனக்கு வைத்தியம் செய்த நர்ஸ் டெப்பி ரோவியை திருமணம் செய்து கொண்டார். இவரின் மூலமே மைக்கேல் ஜாக்சனுக்கு குழந்தைகள் பிறந்தன.  இவருடனான திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பெரிய தொகையை செட்டில் செய்த ஜாக்சனை அதன் பின்னரும் அவர் சாகும் வரை, வழக்கு போட்டு பணம் கேட்டபடியே இருந்தார் டெப்பி.

வாழ்க்கையின் மிக அற்புதமான தருணமாக அமெரிக்க கருப்பின பாடகர் ஜேம்ஸ் ப்ரௌனுக்கு பெட் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியதை ஜாக்சன் குறிப்பிட்டார். "என் வாழ்க்கையில் இவரைப்போல்  யாருமே உந்துசக்தியாக இருந்ததில்லை" என கண்ணீர் மல்க சொன்னார் மைக்கேல்.

செய்தியாளர்களுடன் ஒரு வித இடைவெளியை கடைபிடித்தே வந்த ஜாக்சன் 2003-ல் மார்ட்டின் பஷிர் என்கிற பிரிட்டிஷ் செய்தியாளருக்கு தன்னை பற்றிய இரண்டு மணி நேர ஆவணவப்படத்துக்கு ஒப்புதல் அளித்தார். அது ஒளிபரப்பப்பட்ட போது 3 கோடி பேர் அதை பார்த்தது அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றில் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால் அதில் " குழந்தைகளுடன் தான் படுக்கையில் இருப்பேன்" என வெகுளியாக அவர் தெரிவித்த கருத்து குழந்தைகள் மீதான பாலியல் துஷ்ப்ரயோகம் வழக்கில் கொண்டு வந்து நிறுத்தியது. அவர் குற்றஞ்சாட்டப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பரவியதை போல் அவர் குற்றம் செய்யவில்லை என கோர்ட் விடுதலை செய்யப்பட்டது வெளியே பரவவில்லை.

உலகின் பல முன்னணி பத்திரிக்கையில் முதன் முதல் இடம் பெற்ற முதல் கருப்பர் மைக்கேல் ஜாக்சனே ஆவார். அவர் தன்னை வெள்ளைக்காரனாக மாற்ற சாகும் வரை முயன்று கொண்டிருந்தார், தன் கருப்பு நிறத்தின் மீது அவருக்கு வெறுப்பு இருந்தது என இன்றளவும் ஒரு பேச்சு உண்டு. அவர் மீதான சிறார் பாலியல் குற்றச்சாட்டுக்களைப் போலவே இதுவும் அடிப்படையற்றது. உண்மை என்னவென்றால் மைக்கேல் ஜாக்சன் 'விட்டிலிகோ' என்கிற வெண் புள்ளி தோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். வெண்மையை மறைக்க நவீன விஞ்ஞானத்தால் முடியாது என்பதால் மீதமுள்ள தோல் பகுதியையும் வென்மையாக்கும் கடுமையான சிகிச்சை முறைக்கு சென்றார். அதனால் அவரின் வாழ்க்கையே இழக்கும் நிலைக்கு சென்றதுதான் உண்மை.

வதவதவென குழந்தைகள் நிறைந்த குடும்பத்தில் 7 வது பிள்ளையாக பிறந்து கடுமையான வறுமையில் காபரே ஆடிய பெண்கள் மீண்டும் ஆடை அணிய நேரத்தில் பாடல் பாடும் வேலையில் தன் வாழ்வை தொடங்கிய குழந்தை தொழிலாளி துள்ளிசை நாயகன் மைக்கேல் ஜாக்சன் இறுதி இசை சுற்றுப்பயணத்தின் பெயர் (இதுதான்). அவரின் ஒவ்வொரு பாடலையும் இசை ரசிகர்கள் கேட்கும் போது சொல்லும் வார்த்தை அது "This is it"

No comments :

Post a Comment