ஜேர்மன் கால்பந்தாட்ட கழக அணியில் பிரகாசிக்கும் புலம்பெயர் இலங்கை வீரர்!
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று உலக நாடுகளில் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனைகளை நிலைநாட்டும் இலங்கையர்கள் அநேகம்.
அந்தவகையில் இலங்கையிலிருந்து சென்று ஜேர்மனில் கால்பந்தாட்டக்கழகமொன்றுக்குத் தெரிவாகிய வசீம் ராசிக் அங்கு கலக்கி வருகின்றார்.
அவர், தனது அனுபவங்கள், சாதனைகள், சவால்களில் சிலவற்றைப் பற்றி ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்துகொண்டார். இவர் ஜேர்மனின் தலைநகர் பேர்லினில் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வருகிறார்.
ஜேர்மனிலுள்ள விளையாட்டுக்கழகங்களில் பிரபலம்பெற்ற விளையாட்டுக் கழகமான பேர்லின் மிட் பீல்ட் கால்பந்தாட்ட விளையாட்டுக்கழகத்தில் முன்னணி விளையாட்டு வீரராகத் திகழ்கின்றார்.
இவரது குடும்பமே ஒரு விளையாட்டுக் குடும்பமாகும். இவரது தந்தை ஜமால் ராசிக் இலங்கை தேசிய ஹொக்கி அணியின் உப தலைவராக இருந்துள்ளார்.
அத்துடன் வசீமின் இரு சகோதரர்களும் ஜேர்மனியின் இரு பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கால்பந்தாட்டக் கழகங்களுக்காக விளையாடி வருகின்றனர்.
அரநாயக்கா, கவுல்பிட்டியை பூர்வீகமாகக் கொண்டது ஜமால் ராசிக்கின் குடும்பம். இவரது தந்தை ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகின்றனர். அத்துடன் விளையாட்டுக்காகவும் தங்களது பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தனது இந்நிலைக்கு பெற்றோரின் ஊக்குவிப்பே காரணம் எனவும் கூறுகின்றார் வசீம். மேலும் சிறுவயதிலிருந்தே இவருக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்துள்ளது. அவர் தனது ஆறாம் வயதிலேயே அல் குர் ஆனை ஓதிமுடித்துள்ளார்.
சிறுவயதில் மிகவும் உடற்பருமனாகக் காணப்பட்டமையால் இதற்கு கால்பந்தாட்டமே சிறந்த மருந்து என்று கருதிய இவரது தந்தை இவரை கால்பந்தாட்டப் பயிற்சிகளுக்கு அனுப்பியுள்ளார்.
உலகில் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களான லயனல் மெஸ்ஸி, றொனால்டோ ஆகியேரைப்போன்று முன்னணி வீரராக வலம் வரவேண்டும் என்பதே இவரது கனவாகும்.
அதற்காக முறையான பயிற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, கட்டுப்பாடான உணவுப்பழக்கம் என்பன இன்றியமையாதது. ஆகவே அவற்றை நான் முறையாக மேற்கொண்டு அதற்காக உழைத்து வருகின்றேன் எனத் தெரிவிக்கிறார் வசீம்.
விளையாட்டின் போது காயமேற்படுவது சகஜம் எனவும் அதை தான் அடிக்கடி எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். விளையாட்டின் போது காலிலும் தோற்பட்டையிலும் ஏற்பட்ட காயத்தினால் சில மாதங்கள் இவர் விளையாடாமல் ஓய்வில் இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பின்னர் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பியுள்ளார். இங்கு ஒரு வருடத்தில் 40 தொடக்கம் 50 இற்கு இடைப்பட்ட போட்டிகளில் பங்குபற்றவேண்டும்.
அங்கு இடம்பெற்ற போட்டிச் சுற்றொன்றில் மீட் பீல்ட் விளையாட்டுக்கழகம் 4ஆம் இடத்துக்கு தெரிவாவதற்கு வசீமும் கடுமையாக உழைத்துள்ளார். இதில் அடுத்த சுற்றுப் போட்டி இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியது.
இதன் முதற்போட்டியில் வசீமின் அணி 4 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் வசீம் 2 கோல்களைப் போட்டு அசத்தியுள்ளார். இரண்டாவது போட்டியில் 1–0 கோல் கணக்கில் அணி தோல்வியடைந்தாலும் அதிலும் வசீமே ஒரு கோலைப் போட்டுள்ளார்.
இப்போட்டிச் சுற்றில் 45 போட்டிகளில் 39 போட்டிகளில் பங்குபற்றவேண்டுமென்று வசீம் கூறுகின்றார். வசீமின் அபார போட்டித்திறமை காரணமாக ஜேர்மன் கனிஸ்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு அவருக்கு அழைப்பு கிடைத்துள்ளது.
இவரே இவ்வாய்ப்பு கிடைத்த முதலாவது இலங்கையராவார். இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தது பெருமை என்கிறார்.
ஜேர்மனில் அசத்திவரும் இவருக்கு இலங்கையின் தேசிய கால்பந்து அணியில் விளையாட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை தனது வாழ்வில் கிடைத்த இன்னுமொரு கௌரவமாகவே கருதுகின்றார்.
இவர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை தேசிய அணியிலும் விளையாடவுள்ளார். இதற்காக வசீமுக்கு இலங்கை அரசு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கியுள்ளது.
விளையாட்டுத் துறைக்கும் வேறு துறைகளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. விளையாட்டுத்துறையில் பிரகாசிக்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் நனவாவதில்லை.
அதிலும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு வேறொரு நாட்டின் பிர பலமான கால்பந்தாட்டக்கழகத்தில் விளையாடக் கிடைப்பதென்பது அவரது அயராத உழைப்பு, முயற்சி, மனவலிமை போன்றவற்றால் மட்டுமே சாத்தியமாகும்.
ஆகவே இது தனது இலங்கைக்கு கிடைத்த பெருமை என வசீம் தெரிவித்துள்ளார். தற்போது ஜேர்மன் ஊடகங்களுக்கு இவரது பெயர் மிகவும் சகஜமாகிவிட்டது. அந்தளவிற்கு ஜேர்மனிய ஊடகங்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment