வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர்களின் கதை தெரியுமா?

No comments

வடிவேலுவுடன் இணைந்து வயிறு குலுங்க சிரிக்கவைத்த இவர்களின் முகங்கள் நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இவர்கள் பின்னால் இருக்கும் கதைகள் தெரியுமா? தெரிஞ்சுக்குவோமா....

வடிவேலு காமெடியில் வெங்கல் ராவ்

வெங்கல் ராவ் :-
கழுத்திலிருந்து கையை எடுத்தால் சங்கைக் கடிக்கும் வினோத வியாதி கொண்டவராக நடித்தவர் வெங்கல் ராவ். திரையில் வடிவேலுவுடன் இணைந்து கலகலப்பூட்டும் இவருக்குப் பின்னால் பெரும் சோகக்கதை இருக்கிறது. விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கல் ராவின் அப்பா, வெங்கல் ராவ் சிறுவனாக இருக்கும்போதே காலமாகிவிட்டார். குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே ஒன்றரை ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தார். அப்போது, அந்த ஊரில் இருந்த குஸ்தி வாத்தியார் குஸ்தி போடுவதை, சிலம்பம் சுற்றுவதைப் பார்த்து அதில் ஆர்வமான வெங்கல் ராவ், கற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார். 10 வருடங்கள் குஸ்திப் பயிற்சி பெற்றவர், ஸ்டன்ட் நடிகராக ஆசைப்பட்டு  சென்னைக்கு ரயிலேறினார். சினிமாவில் பல வருடங்களாக ஸ்டன்ட் நடிகராக நடித்த வெங்கலுக்கு வயதாக ஆக வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அந்தச் சமயத்தில் வடிவேலுவிடம் தனது கஷ்டத்தை எடுத்துக் கூற, அவரும் தான் நடிக்கும் படங்களில் சில சீன்களில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். `தலைநகரம்', `வேல்', `கந்தசாமி' எனப் பல படங்கள் வடிவேலுவுடன் நடித்த வெங்கல் ராவ் `வடிவேலுதான் எனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம்' என நெகிழ்ச்சியாகக் கூறுவாராம்.

முத்துக்காளை :

`சிக்கன் 65-ல் அஞ்சு இங்கே இருக்கு. மிச்சம் அறுபது எங்கடா போச்சு?' என கோக்குமாக்காய் கேள்விகேட்டு வடிவேலுவை கதிகலங்க வைத்தவர். நெற்றியில் எலும்புக்கூடு படம் வரைந்துகொண்டு வடிவேலுவின் காதைத் தொட தெருத்தெருவாக துரத்தியே பிரபலமானவர் முத்துக்காளை. `இம்சை அரசன்', `திவான்', `என் புருஷன் குழந்தை மாதிரி' என பல படங்கள் வடிவேலுடன் இணைந்து நடித்திருக்கிறார். ராஜபாளையம் அருகிலுள்ள சங்கம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த முத்துக்காளை, இளம் வயதிலேயே தற்காப்பு கலைகள், ஜிம்னாஸ்டிக்ஸ், சிலம்பம் ஆகியவை கற்றவர். சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக ஆசைப்பட்டு சென்னைக்கு பஸ் ஏறியவர், விஜய் நடித்த `காதலுக்கு மரியாதை' படம் மூலம் ஸ்டன்ட் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் `பொன்மனம்' என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்த முத்துக்காளைக்குத் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. காமெடிக் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவரும் இவர் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.


அல்வா' வாசு :

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட `அல்வா' வாசுவின் முழுப்பெயர் வாசுதேவன். `அல்வா' எனும் அடைமொழி `அமைதிப்படை' படத்தால் வந்தது. அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்ததும் சென்னையைச் சுற்றிப்பார்க்க பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்திருக்கிறார். சென்னைக்கு வந்து இறங்கியதும் சினிமாத் துறையில் இருக்கும் தனது நண்பனை சந்திக்கச் சென்ற `அல்வா' வாசுவும் `சினிமாதான் இனி வாழ்க்கை' என அங்கேயே தங்கிவிட்டார். அதன் பின்பு மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தவர், `வாழ்க்கை சக்கரம்' படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் தொடர்ந்து நடித்துவந்த `அல்வா' வாசு, வடிவேலுவுடன் இணைந்து `இங்கிலீஷ்காரன்', `கருப்புசாமி குத்தகைதாரர்' , `எல்லாம் அவன் செயல்' என நிறையப் படங்களில் நடித்திருக்கிறார்.

`போண்டா' மணி :

ஊரணிக்குள் இருந்து எழுந்து வந்து `அடிச்சுக்கூட கேட்பாங்க. அப்பவும் எதையும் சொல்லிடாதீக' என ஒரே ஒரு டயலாக்கைப் பேசிய பிரபலமானவர் `போண்டா' மணி. இலங்கையை சொந்த ஊராகக் கொண்ட இவரது இயற்பெயர் கேதீஸ்வரன். பள்ளிக்காலங்களில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்தவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. 80-களின் ஆரம்பத்தில் சிங்கப்பூருக்கு வேலையாக சென்றிருந்த `போண்டா' மணி அங்கே இயக்குநர் பாக்யராஜை சந்தித்திருக்க்கிறார். அவரிடம், தனது கனவையும் கூறியிருக்கிறார். பின்னர், இலங்கையில் பிசினஸ் செய்துகொண்டிருந்தவருக்கு காலில் அடிபட்டு விட, மருத்துவம் பார்க்க தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்போது மறுபடியும் பாக்யராஜை சந்திக்க வாய்ப்பு கிடைக்க, கூடவே `பவுனு பவுனுதான்' படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கு ஆரம்பித்த பயணம் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

செல்லதுரை :

பிரபா ஒயின்ஷாப் காமெடியில் வடிவேலுவுடன் இணைந்து கலக்கியவர். `தாஸ்',` தலைநகரம்' எனப் பல படங்கள் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருக்கிறார். பாக்யராஜ் இயக்கிய `தூறல் நின்னுப் போச்சு' படத்தில் அறிமுகமானவர், கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கிரேன் மனோகர் :

'ரெண்டு' படத்தில் `என் கூட சரசம் பண்றதுக்குனே கிளம்பி வர்றீங்களடா, ஏன்டா இப்படி பட்ட இடத்துல வந்தே பன்ச் பண்றீங்க?' என வடிவேலுவைக் கதறவைத்தவர். `நாட்டாமை' படத்தில் அறிமுகமானவர், அதன் பிறகு, `முத்து' படத்தில் டீக்கடைக்காரராக நடித்தார். அதன் பின்னர் `பாட்டாளி',`ஏய்',`வின்னர்' எனப் பல படங்கள் வடிவேலுவுடன் இணைந்து நடித்தார்.

இன்னும் இந்த லிஸ்டில் `நெல்லை' சிவா, பெஞ்சமின், `சூப்பர் குட்' லெஷ்மன், அமிர்தலிங்கம் என நிறையப் பேர் இருக்கிறார்கள்.

No comments :

Post a Comment